அசுத்த நீரை குடித்த பெண் சாவு; 40 பேருக்கு தீவிர சிகிச்சை


அசுத்த நீரை குடித்த பெண் சாவு; 40 பேருக்கு தீவிர சிகிச்சை
x

விஜயநகர் அருகே, அசுத்த நீரை குடித்த பெண் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது. மேலும் 40 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஜயநகர்:

அசுத்த தண்ணீர்

வடகர்நாடக மாவட்டங்களில் அசுத்த தண்ணீரை குடித்து மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராய்ச்சூர் மாவட்டத்தில் அசுத்த தண்ணீர் குடித்த 7 பேர் உயிரிழந்தனர். கலபுரகியிலும் 2 பேர் அசுத்த தண்ணீருக்கு தங்களது உயிரை பறிகொடுத்து இருந்தனர். இந்த நிலையில் அசுத்த தண்ணீர் குடித்த மேலும் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டே டவுன் ராணிப்பேட்டை பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளால் சுத்தமான தண்ணீருடன், சாக்கடை கழிவுநீர் கலந்து விடுவதாகவும், அந்த தண்ணீரை குடித்து உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் ராணிப்பேட்டை பகுதி மக்கள் கூறி வந்தனர். ஆனாலும் இதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.

பெண் சாவு

இந்த நிலையில் அசுத்த தண்ணீர் குடித்ததால் ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த 41 பேருக்கு திடீரென வாந்தி-மயக்கம் உண்டானது. இதனால் 41 பேரையும் அவர்களது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஒசப்பேட்டேயில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு 41 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் லட்சுமி(வயது 55) என்ற பெண் உயிரிழந்தார்.

40 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் பற்றி அறிந்ததும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ராணிப்பேட்டை பகுதிக்கு விரைந்து சென்றனர். மேலும் அப்பகுதி மக்கள் குடித்து வரும் தண்ணீரை வாங்கி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராணிப்பேட்டை பகுதியில் மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டு உள்ளது. அசுத்த தண்ணீர் குடித்த பெண் உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story