ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது சக்கரத்தில் சிக்கி பெண் சாவு
துமகூரு ரெயில் நிலையத்தில் குழந்தைகளுக்கு உணவு வாங்குவதற்காக ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய பெண், கால் தவறி தண்டவாளத்தில் விழுந்து ரெயில் சக்கரத்தில் சிக்கி கால்கள் துண்டாகி உயிரிழந்தார்.
பெங்களூரு:-
ஓடும் ரெயிலில் இருந்து...
பெங்களூரு நகரில் வசித்து வந்தவர் சந்திரம்மா (வயது 39). இவர், நேற்று முன்தினம் மாலையில் பெங்களூருவில் இருந்து தாவணகெரேவுக்கு தனது குழந்தைகளுடன் ரெயிலில் புறப்பட்டு சென்றார். அந்த ரெயில் துமகூரு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. சிறிது நேரத்தில் அந்த ரெயில் புறப்பட தயாரானது. அந்த சந்தர்ப்பத்தில் குழந்தைகளுக்கு உணவு வாங்குவதற்காக ஓடும் ரெயிலில் இருந்து சந்திரம்மா கீழே இறங்க முயன்றார்.
அந்த சந்தர்ப்பத்தில் ரெயில் சற்று வேகமாக சென்றதால் எதிர்பாராதவிதமாக கால் தவறி சந்திரம்மா தண்டவாளத்தில் விழுந்து விட்டார். இதில் ரெயில் சக்கரத்தில் சந்திரம்மா சிக்கிக் கொண்டார். இதில் அவரது 2 கால்களும் துண்டானது. இதனால் அவர், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். உடனே அங்கிருந்தவர்கள் சந்திரம்மாவை மீட்டு துமகூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பெண் சாவு
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு சந்திரம்மா மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலையில் சந்திரம்மா பரிதாபமாக இறந்து விட்டார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர், குழந்தைகள் கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.
முன்னதாக துமகூரு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த போது, ஓடும் ரெயிலில் இருந்து கவனக்குறைவாக சந்திரம்மா இறங்கியதால், 2 கால்களும் துண்டாகி அதிகபடியான ரத்தம் வெளியேறியதால், பலியானது தெரியவந்தது. இதுகுறித்து துமகூரு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.