கருவை கலைக்க மாத்திரை தின்ற பெண் சாவு
கருவை கலைக்க கருத்தடை மாத்திரை சாப்பிட்ட பெண் உயிரிழந்தார்.
பேகூர்:
பெங்களூரு பேகூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நியூ மைகோ லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் தேபபிராத். இவரது மனைவி பிரீத்தி குஷ்வகா (வயது 33). இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் பிரீத்தி மீண்டும் கர்ப்பமானார். தற்போது 3 மாத கர்ப்பமாக இருந்தார். ஆனால் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லாத பிரீத்தி கருவை கலைக்க முடிவு செய்தார். இதுபற்றி அவர் தனது கணவர் தேபபிராத்திடம் கூறியுள்ளார். அப்போது டாக்டரின் ஆலோசனை பெற்று கருவை கலைக்கும்படி தேபபிராத் கூறியதாக தெரிகிறது. ஆனால் டாக்டரை பார்க்க செல்லாத பிரீத்தி கருவை கலைக்க கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதாக தெரிகிறது. இதனால் அவருக்கு கடும் ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரீத்தி மயக்கம் போட்டு விழுந்தார். உடனே அவரை கணவர் தேபபிராத் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பிரீத்தியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்தது தெரியவந்து உள்ளது. சம்பவம் குறித்து பேகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.