டயர் வெடித்ததால் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்டு பெண் என்ஜினீயர் சாவு; தரமற்ற ஹெல்மெட் அணிந்ததால் நடந்த பரிதாபம்
பெங்களூருவில் டயர் வெடித்ததால் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்டு கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் தலையில் காயம் அடைந்து உயிரிழந்தார். தரமற்ற ஹெல்மெட் அணிந்ததால் இந்த பரிதாபம் நடந்துள்ளது.
பெங்களூரு:
ஸ்கூட்டர் டயர் வெடித்தது
மண்டியா மாவட்டம் இட்டமடுவை சேர்ந்தவர் சுலோச்சனா (வயது 21). இவர், கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். பெங்களூருவில் தங்கி இருந்து கோரமங்களாவில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் சுலோச்சனா பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வேலை முடிந்ததும் சுலோச்சனா, தன்னுடன் பணியாற்றும் ஆனந்த்குமார் என்பவருடன் ஸ்கூட்டரில் வீட்டுக்கு புறப்பட்டார்.
ஸ்கூட்டரை ஆனந்த்குமார் ஓட்டினார். அவர்கள் கெங்கேரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நைஸ் ரோடு, ஒசகெகேரஹள்ளி சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஸ்கூட்டர் டயர் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் ஆனந்த்குமாரின் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் பல்டி அடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன்காரணமாக ஸ்கூட்டரில் இருந்து ஆனந்த்குமாரும், சுலேச்சனாவும் தூக்கி வீசப்பட்டனர்.
பெண் என்ஜினீயர் சாவு
ஆனந்த்குமாருக்கு கை, காலில் பலத்தகாயம் ஏற்பட்டது. சுலோச்சனா தலையில் பலத்தகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனடியாக 2 பேரும் விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுலோச்சனா பரிதாபமாக உயிரிழந்தார். ஆனந்த்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உயிருக்கு ஆபத்தில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சுலோச்சனா தரமற்ற பாதி அளவுள்ள ஹெல்மெட்டை அணிந்திருந்தார். ஆனந்த்குமார் தரமான முழு ஹெல்மெட்டை அணிந்திருந்தார். இதனால் அவரது தலையில் காயம் ஏற்படவில்லை. தரமற்ற பாதி அளவுள்ள ஹெல்மெட் அணிந்ததால் சுலோச்சனாவின் தலையில் காயம் அடைந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கெங்கேரி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.