விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியை காலால் எட்டி உதைத்த பெண்
பெங்களூரு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியை காலால் எட்டி உதைத்த பெண் வெடி குண்டு இருப்பதாக கூறி, பீதியை ஏற்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூரு:-
பெங்களூரு விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் ஒரு பெண் வந்தார். அவர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி சந்தீப் சிங்கிடம், தான் அவசரமாக கொல்கத்தாவுக்கு செல்ல வேண்டும் என்றும், அதனால் தன்னை உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் அவர் தாமதமாக வந்ததை காரணம் காட்டி அவரை அனுமதிக்க அதிகாரி சந்தீப் சிங் மறுத்தார். இதனால் அந்த பெண், தான் கொல்கத்தாவுக்கு விரைவில் செல்லாவிட்டால் பெங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி பதற வைத்தார். மேலும் அந்த பெண், சந்தீப் சிங்கின் சட்டையை பிடித்து அவரது முகத்தில் தாக்கினார். காலாலும் எட்டி உதைத்தார். மேலும் அங்கிருந்த பயணிகளிடமும் விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறி பீதியை ஏற்படுத்தினார். இதையடுத்து அங்கு வந்த விமான நிலைய போலீசார் அந்த பெண்ணை பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த மானசி
சதீபைனு(வயது 31) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.