காதல் படுத்தும் பாடு: காதலனை திருமணம் செய்ய வங்காள தேசத்தில் இருந்து இந்தியாவிற்கு நீந்தி வந்த இளம்பெண்...!
இந்தியாவில் உள்ள தனது காதலனை திருமணம் செய்வதற்காக, வங்காள தேசத்தில் இருந்து இளம்பெண் ஒருவர் நதியில் நீந்தி எல்லை தாண்டி வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தா,
காதலுக்கு கண்கள் இல்லை என்று கூறுவதுண்டு. காதலுக்கு எல்லைகளும் இல்லை என நிரூபித்து உள்ளார் வங்காள தேசத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர்.
வங்கதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் கிருஷ்ணா மந்தல். இவருக்கும் இந்தியாவைச் சேர்ந்த அபிக் மந்தலுக்கும் முகநூல் மூலமாக நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது.
இதனைத் தொடர்ந்து இவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால், கிருஷ்ணா மந்தலிடம் இந்தியா வருவதற்காக பாஸ்போர்ட் இல்லை. ஆனாலும் தனது காதலனைத் திருமணம் செய்து கொள்வதற்காக கிருஷ்ணா எடுத்த அதிரடி முடிவு அனைவரையும் தூக்கி வாரி போட்டுள்ளது.
காதலனை மணப்பதற்காக சட்டவிரோதமாக எல்லை தாண்ட முடிவு செய்த அவர், சுந்தரவனக்காட்டை முதலில் வந்தடைந்துள்ளார். அங்கிருந்த நதியில் ஒரு மணிநேரம் நீந்தி தொடர்ந்து தனது இலக்கை அடைந்தார். இந்தியா வந்த அவர் மூன்று நாட்களுக்கு முன்பு கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவிலில் வைத்து தனது காதலனை நினைத்தப்படியே திருமணம் செய்து கொண்டார்.
இந்தநிலையில், சட்டவிரோதமாக எல்லையை கடந்து வந்தற்காக கிருஷ்ணா மந்தலியை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் வங்கதேசத்தின் உயர் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவித்தன.
கடந்த வாரத்தில், டீன் ஏஜ் பையன் ஒருவன் தனக்கு விருப்பமான சாக்லேட் வாங்குவதற்காக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.