குழந்தை கண்முன்னே தாய்க்கு பாலியல் தொல்லை; ஓடும் ரெயிலில் இருந்து பெண்ணை வெளியே தள்ளிவிட்டு தானும் குதித்த நபர்!


குழந்தை கண்முன்னே தாய்க்கு பாலியல் தொல்லை; ஓடும் ரெயிலில் இருந்து பெண்ணை வெளியே தள்ளிவிட்டு தானும் குதித்த நபர்!
x

பாலியல் வன்கொடுமைக்கான முயற்சியில் திருமணமான பெண் ஒருவர், ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டு கொல்லப்பட்டார்.

சண்டிகர்,

அரியானா மாநிலம் பதேஹாபாத் மாவட்டத்தில் 30 வயது திருமணமான பெண் ஒருவர், ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லப்பட்ட பெண், ரோஹ்தக் பகுதியில் தன் 9 வயது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர், வியாழக்கிழமை இரவு, 145 கிமீ தொலைவில் உள்ள தோஹானாவில் இருக்கும் தன் கணவரை காண ரெயிலில் பயணித்துள்ளார்.

தோஹானா நகர் ரெயில் நிலையத்திற்கு அருகில் ரெயில் சென்று கொண்டிருந்த போது, அந்த பெண் மற்றும் அவரது மகன் பயணித்த ரெயில் பெட்டியில் 3 பயணிகளைத் தவிர, பெட்டி முழுவதும் காலியாக இருந்தது.

இதனை சாதகமாக பயன்படுத்திய ஒரு நபர், தனியாக பயணித்த பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அந்த நபரை எதிர்த்து போராடியுள்ளார். உதவிக்கு ஆள் இல்லாததால் அவரால் தனியாக சமாளிக்க முடியவில்லை.

இந்த நிலையில், ரெயில் நிலையம் இன்னும் சற்று நேரத்தில் வரப்போவதை அறிந்த அந்த நபர் அந்த பெண்ணை ஆத்திரத்தில் ரெயிலில் இருந்து தள்ளிவிட்டு தானும் குதித்து விட்டார்.

பதேபாத்தில் உள்ள தோஹானா நகரில் ரெயில் நிலையத்திற்குள் வந்தபோது, அந்த பெண்ணின் கணவர் குழந்தை மட்டும் தனியாக இருப்பதைக் கண்டார்.

பின்னர் குழந்தை நடந்த விஷயங்களை தன் தந்தையிடம் அழுதுகொண்டே கூறியது.இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர் உடனே போலீசில் புகாரளித்தார்.

இந்த சம்பவம் குறித்து பெண்ணின் கணவர் கூறுகையில், "என் மகன் அழுது கொண்டிருந்தான். அவன் என்னிடம் ஓடி வந்து, ஒரு நபர் தனது தாயை ரெயில் கதவில் இருந்து தள்ளிவிட்டார் என்று கூறினான்.

ரெயில் நிலையத்திற்கு 20 கி.மீ தொலைவில் ரெயிலில் இருக்கும் போது எனது மனைவி மொபைலில் என்னை அழைத்தாள், தன்னை அழைத்துச் செல்ல ரெயில்வே ஸ்டேஷனுக்கு என்னை வரச் சொன்னாள். ஆனால் இப்போது அவள் உயிருடன் இல்லை" என்று உயிரிழந்த பெண்ணின் கணவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து, ரெயில்வே போலீஸ், எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. அதன் பின்னர் போலீசார் தீவிரமாக தேடி குற்றவாளியை கண்டுபிடித்தனர். அந்த நபர் பெயர் சந்தீப் எனவும் 27 வயதான அந்த இளைஞன் ரெயிலில் இருந்து கீழே குதித்ததில் காயமடைந்திருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் போலீசார் குற்றவாளியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த கொடும் சம்பவம் நடந்த போது நள்ளிரவு நேரமாகிவிட்டதால், கொல்லப்பட்ட பெண்ணின் உடலை தேடி கண்டுபிடிக்க சிரமம் ஏற்பட்டது.

போலீசார் மற்றும் பெண்ணின் குடும்பத்தினர் நள்ளிரவு வரை ரெயில் பாதையில் அவரது உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் இருள் மற்றும் உயரமான புதர்கள் காரணமாக தேடுதல் கடினமாக இருந்தது. எனினும் இன்று காலை பெண்ணின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

போலீஸ் தரப்பில் கூறுகையில், இரவு நேரங்களில் ரெயில் பெட்டிகளை ரெயில்வே போலீசார் கண்காணித்து வருவது வழக்கமான பணி.இந்த சம்பவத்தின் போது ரெயிலில் யாருமில்லாததால், பாதுகாப்பு குறைபாடு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயிலில் பாதுகாப்பு பணியில் யார் இருந்தார்கள் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயிலில் தனியாக இருந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டு அவரை ரெயிலில் இருந்து வெளியே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story