பெண்ணின் உடல் 6 மாதங்களுக்கு பின் அழுகிய நிலையில் மீட்பு
பெங்களூருவில், மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடல் 6 மாதங்களுக்கு பின் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு, பிப்.4-
கிரிக்கெட் விளையாடினர்
பெங்களூரு உளிமாவு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அக்ஷய் நகரில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்று உள்ளது. அங்கு அமைந்திருக்கும் மைதானத்தில் அப்பகுதி சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் அப்பகுதி இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட சென்றனர்.
அப்போது பந்து அங்குள்ள புதர்மண்டிக்கிடக்கும் பகுதியில் விழுந்தது. இதையடுத்து அந்த பந்தை எடுக்க ஒரு வாலிபர் சென்றார். அப்போது அவர் அங்குள்ள ஒரு மரத்தில் உடல் அழுகிய நிலையில் ஒரு பிணம் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அழுகிய நிலையில்...
அலறி அடித்துக்கொண்டு ஓடிய அவர் இதுபற்றி தன்னுடன் விளையாட வந்தவர்களிடம் தெரிவித்தார். அவர்கள் இதுபற்றி உளிமாவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் தொங்கிய பிணத்தை கைப்பற்றினர். உடல் மிகவும் அழுகிய நிலையில் மோசமாக இருந்ததால் சம்பவ இடத்திற்கே மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது அது ஒரு பெண்ணின் உடல் என்பது தெரியவந்தது. மேலும் அந்த பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே தூக்குப்போட்டு செத்திருக்கலாம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பெண்களின் பட்டியலை எடுத்து ஆய்வு செய்தனர். மேலும் அதே பகுதியில் வேறு ஏதும் தடயம் கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்தனர்.
நேபாள பெண்
அப்போது பெண்கள் அணியக்கூடிய ஒரு ஜோடி செருப்பு, ஒரு நெக்லஸ் ஆகியவை அப்பகுதியில் கிடைத்தது. மேலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வந்த புஷ்பதாய் என்ற பெண் மாயமாகி இருந்ததும், அதுபற்றிய புகாரின்பேரில் போலீசார் அந்த பெண்ணை தேடி வருவதும் தெரியவந்தது.
அதை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் தூக்கில் பிணமாக தொங்கியது நேபாளத்தைச் சேர்ந்த புஷ்பதாய்(வயது 27) என்பதும் தெரியவந்தது. இதை அவரது குடும்பத்தினரும் உறுதிப்படுத்தினர். நேபாளத்தைச் சேர்ந்த புஷ்பதாய், திருமணத்திற்கு பிறகு பெங்களூருவில் கணவருடன் குடியேறி வசித்து வந்துள்ளார்.
6 மாதங்களாக...
இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிய அவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் உலக அளவில் பெயர் பெற்று வரும் பெங்களூருவில், ஒரு பெண் பொது இடத்தில் தற்கொலை செய்து கொண்டு 6 மாதங்களாக அதை யாரும் பார்த்திராமல் இருந்ததும், இதுபற்றி போலீசாரும் கண்டுகொள்ளாமல் இருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து உளிமாவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.