தொழிலாளிக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு


தொழிலாளிக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு
x

சிக்கமகளூருவில் தொழிலாளிக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குரங்கு காய்ச்சல் மீண்டும் பரவ தொடங்கி உள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

சிக்கமகளூரு:-

குரங்கு காய்ச்சல்

கர்நாடகத்தின் மலைநாடு மாவட்டங்களாக சிவமொக்கா, சிக்கமகளூரு உள்ளன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவமொக்கா மாவட்டத்தில் குரங்கு காய்ச்சல் பரவியது. வனப்பகுதியில் கே.எப்.டி. நோய் தாக்கி உயிரிழக்கும் குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவி காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த காய்ச்சலால் சிவமொக்காவில் ஏராளமானோர் உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்றனர்.

சிவமொக்கா மட்டுமின்றி சிக்கமகளூரு மாவட்டத்திலும் பலருக்கு இந்த குரங்கு காய்ச்சல் பரவியது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் குரங்கு காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. சிக்கமகளூரு மாவட்டத்தில் ஒருவருக்கு இந்த குரங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதுபற்றிய விவரம்

பின்வருமாறு:-

தொழிலாளி பாதிப்பு

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா பாலேஒன்னூர் பகுதியில் காபி தோட்டத்தில் வேலை பார்த்து வரும் கூலி தொழிலாளி ஒருவர் கடந்த சில தினங்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து டாக்டர்கள், அவரது ரத்த மாதிரியை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த ரத்த மாதிரியில், அவருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த தொழிலாளி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வனத்துறையினர் ஆய்வு

இந்த நிலையில் பாலேஒன்னூர் பகுதியில் குரங்கு எதுவும் செத்து கிடக்கிறதா என்று வனத்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் கூலி தொழிலாளியுடன் தொடர்பில் இருந்தவர்களின் ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பாலேஒன்னூர் சுற்றுவட்டார பகுதியில் கிருமி நாசினி திரவம் தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிக்கமகளூருவில் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.


Next Story