மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு தொழிலாளி சாவு


மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு தொழிலாளி சாவு
x

பெங்களூருவில் மொபட் மீது கார் மோதிய கோர விபத்தில் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு தொழிலாளி பலியானார். விமானத்தை வேடிக்கை பார்க்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு;

விமானத்தை பார்க்க சென்றனர்

பெங்களூரு எலகங்கா அருகே ஜக்கூர் லே-அவுட்டை சேர்ந்தவர் கோவிந்தப்பா (வயது 45), தொழிலாளி. இவரது மனைவி சசிகலா. இவரது சகோதரி அருணா. இவருக்கு 11 வயதில் சஞ்சய் என்ற மகன் உள்ளான். இந்த சிறுவன் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். வெளியூரில் வசிக்கும் அருணா தனது மகனுடன் சகோதரி சசிகலாவின் வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்திருந்தார்.

இந்த நிலையில் சஞ்சய், நேற்று காலையில் விமானம் பார்க்க வேண்டும் என்று தாய் அருணாவிடம் கூறியுள்ளான். உடனே சஞ்சயை மொபட்டில் ஏற்றி கொண்டு ஜக்கூர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும் விமானங்களை வேடிக்கை பார்ப்பதற்காக கோவிந்தப்பா அழைத்து சென்றார். பின்னர் ஜக்கூர் மேம்பாலத்தில் மொபட்டில் அமர்ந்தபடி கோவிந்தப்பா நின்றார்.

தொழிலாளி சாவு

சிறுவன் சஞ்சய் மேம்பாலத்தில் நின்றபடி ஜக்கூர் விமான நிலையத்தை பாா்த்து கொண்டு இருந்தான். அந்த சந்தா்ப்பத்தில் மேம்பாலத்தில் வந்த ஒரு கார் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கோவிந்தப்பா மீதும் சிறுவன் சஞ்சய் மீதும் மோதியது. கார் மோதிய வேகத்தில் மேம்பாலத்தில் இருந்து கோவிந்தப்பா தூக்கி வீசப்பட்டார்.

மேம்பாலத்தில் இருந்து விழுந்ததால் தலையில் பலத்தகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சஞ்சய் படுகாயம் அடைந்தான். தகவல் அறிந்ததும் எலகங்கா போக்குவரத்து போலீசார் விரைந்து வந்தனர்.

சஞ்சயை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கு காரணமான காரை ஜே.சி.நகரை சேர்ந்த வருண் ஓட்டியது தெரியவந்தது. அவர் தனது 5 நண்பர்களுடன் விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவை நோக்கி வந்தபோது விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து எலகங்கா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருணை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story