கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்ட மொத்த விலை பணவீக்கம்!
இந்தியாவின் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் மே மாதத்தில் 15.88 சதவீதமாக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
மே மாதத்திற்கான மொத்த விலை பணவீக்க புள்ளிவிவரங்களை மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் வருடாந்திர மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் மே மாதத்தில் 15.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த அளவாக உள்ளது.
நாட்டின் மொத்த விலைப் பணவீக்கம் தொடர்ந்து 14-வது மாதமாக 10 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்து வருகிறது. மொத்த விலைப் பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் 12.96 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரியில் 13.11 சதவீதமாகவும், மார்ச்சில் 14.55 சதவீதமாகவும், ஏப்ரலில் 15.08 சதவீதமாகவும் உயர்ந்தது.
தாதுப் பொருள், எண்ணெய், அடிப்படை உலோகங்கள், ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, உணவுப் பொருட்கள் மற்றும் உணவு அல்லாத பொருட்கள் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக நடப்பாண்டு மே மாத பணவீக்க விகிதம் அதிகரித்தது.
கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது மே மாதத்தில் ஏற்பட்ட விலை அதிகரிப்பு சதவீதம் பின்வருமாறு:-
கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு (8.52 சதவீதம்), உணவுப் பொருட்கள் (2.40 சதவீதம்), கனிமங்கள் (1.73 சதவீதம்) மற்றும் உணவு அல்லாத பொருட்கள் (1.52 சதவீதம்) அதிகரித்துள்ளன. கடந்த 2021ம் ஆண்டு, மே மாதத்தில் மொத்த விலைப் பணவீக்கம் 13.11 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.