பி.டி.ஏ. குடியிருப்பு திட்ட ஊழல் வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு: சுப்ரீம் கோர்ட்டில் எடியூரப்பா மேல்முறையீடு


பி.டி.ஏ. குடியிருப்பு திட்ட ஊழல் வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு:  சுப்ரீம் கோர்ட்டில் எடியூரப்பா மேல்முறையீடு
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பி.டி.ஏ. குடியிருப்பு திட்ட ஊழல் தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் எடியூரப்பா மேல்றையீடு செய்துள்ளார்.

பெங்களூரு: பி.டி.ஏ. குடியிருப்பு திட்ட ஊழல் தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் எடியூரப்பா மேல்றையீடு செய்துள்ளார்.

டெண்டரில் ஊழல்

கர்நாடகத்தில் எடியூரப்பா கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 2 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்தார். அப்போது பெங்களூரு வளர்ச்சி ஆணையம்(பி.டி.ஏ.) சார்பில் ரூ.600 கோடியில் குடியிருப்பு கட்டிடம் கட்டும் திட்டத்திற்கான டெண்டரை விட்டதில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர் டி.ஜே.ஆபிரகாம், மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் பி.டி.ஏ. குடியிருப்பு கட்டுமான திட்ட டெண்டரில் ஊழல் நடந்திருப்பதாகவும், எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.12 கோடி வரை லஞ்சம் பெற்று உள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்துமாறும் கோரப்பட்டது. ஆனால் எடியூரப்பா முன்னாள் முதல்-மந்திரி என்பதால் அவர் மீது வழக்கு தொடர கவர்னரின் அனுமதி தேவை என்றும், அந்த அனுமதி இல்லாததால் மனுவை தள்ளுபடி செய்வதாகவும் கூறி மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

எடியூரப்பா மீது வழக்கு

இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் டி.ஜே.ஆபிரகாம் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த 8-ந் தேதி எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர், கூட்டுறவு மந்திரி எஸ்.டி.சோமசேகர், ஒப்பந்ததாரர் சந்திரகாந்த் ராமலிங்கம் உள்ளிட்டோர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தும்படி சிறப்பு கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து அந்த சிறப்பு கோர்ட்டின் உத்தரவின் பேரில் லோக்அயுக்தா போலீசார், எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, மந்திரி எஸ்.டி.சோமசேகர், ஒப்பந்ததாரர் சந்திரகாந்த் ராமலிங்கம் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் எடியூரப்பா கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

இதற்கிடையே தனக்கு எதிராக வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்காத நிலையில் கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் எடியூரப்பா மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஒப்பந்ததாரர் சந்திரகாந்த் ராமலிங்கம், தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story