அரசு பங்களாவை காலி செய்தார் எடியூரப்பா
கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா அரசு பங்களாவை காலி செய்துவிட்டு சொந்த வீட்டில் குடியேறினார்.
பெங்களூரு:-
காவேரி இல்லம்
கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி கடந்த 2019-ம் ஆண்டு அமைந்தது. இதையடுத்து எடியூரப்பா, அரசு பங்களாவான 'காவேரி'யில் குடியேறினார். அவர் 2 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியை வகித்த நிலையில், முதல்-மந்திரி பதவிக்கு பசவராஜ் பொம்மை நியமிக்கப்பட்டார்.
அதன் பிறகும் எடியூரப்பா அந்த பங்களாவில் வசித்து வந்தார். இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, ஆட்சியை பறிகொடுத்தது.
காலி செய்த எடியூரப்பா
இந்த நிலையில் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து எடியூரப்பா குமரகிருபா ரோட்டில் உள்ள அரசு பங்களாவை காலி செய்துவிட்டு, டாலர்ஸ் காலனில் உள்ள தனது சொந்த வீட்டில் குடியேறியுள்ளார்.
இந்த காவேரி பங்களா, சித்தராமையாவின் அதிர்ஷ்ட இல்லம் ஆகும். அதனால் அந்த பங்களாவில் முதல்-மந்திரியாக உள்ள சித்தராமையா மீண்டும் குடியேற உள்ளார். அவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்தபோதும் அதே பங்களாவில் தான் வசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி.கே.சிவக்குமார்
சித்தராமையா தற்போது வசிக்கும் குமரகிருபாவில் உள்ள அரசு பங்களா துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சித்தராமையா அதை காலி செய்ததும், அதில் டி.கே.சிவக்குமார் அங்கு குடியேற திட்டமிட்டு உள்ளார்.