கர்நாடகத்தில் 8 மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்'


கர்நாடகத்தில் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
x

கர்நாடகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் ‘மஞ்சள் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு:-

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை பெய்யும். இந்த பருவமழை காலத்தில் கர்நாடகத்தில் அதிக மழை பொழிவு இருக்கும். ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. ஜூன் மாதம் தொடங்கினாலும், ஜூலை மாதம் மட்டும் 2 வாரங்கள் கனமழை பெய்தது. அதன்பிறகு மழை பெய்யவில்லை. ஆகஸ்டு மாதத்திலும் பருவமழை பொய்த்து போனது. மேலும் கடுமையான வெயிலும் வாட்டி வதைத்து வந்தது. இந்த

நிலையில் கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வடகர்நாடக மாவட்டங்களான கலபுரகி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.

'மஞ்சள் அலர்ட்'

தலைநகர் பெங்களூருவிலும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வந்தது. கர்நாடகத்தில் வருகிற 12-ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில் கர்நாடகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, பீதர், கலபுரகி, விஜயாப்புரா, சிக்கமகளூரு, குடகு ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த 8 மாவட்டங்களுக்கும் கனமழை பெய்யும் என்பதை குறிக்கும் 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அடுத்த 24 மணி நேரத்தில் பாகல்கோட்டை, பெலகாவி, தார்வார், கதக், ஹாவேரி, கொப்பல், ராய்ச்சூர், யாதகிரி, பல்லாரி, பெங்களூரு, பெங்களூரு புறநகர், சாம்ராஜ்நகர், சிக்பள்ளாப்பூர், சித்ரதுர்கா, தாவணகெரே, ஹாசன், கோலார், மண்டியா, மைசூரு, ராமநகர், சிவமொக்கா, துமகூரு, விஜயநகர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பரவலாக மழை

அத்துடன் வருகிற 13-ந்தேதிக்கு பிறகு மாநிலத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் கலபுரகி, பீதர், விஜயாப்புரா, குடகு, சிக்கமகளூரு, ராமநகர், துமகூரு ஹாசன், தட்சிண கன்னடா உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.


Next Story