பாரதமாதாவை கொன்றுவிட்டீர்கள் நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி ஆவேசம்
மணிப்பூருக்கு ஏன் பிரதமர் செல்லவில்லை?, பாரதமாதாவை கொன்றுவிட்டீர்கள் என்று நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி நேற்று ஆவேசமாக பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி,
மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளி ஏற்பட்டு வருகிறது.
மவுன அஞ்சலி
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று முன்தினம் மக்களவையில் விவாதம் தொடங்கியது.
இந்நிலையில், நேற்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியவுடன், பிரதமர் மோடி, சபைக்கு வரவேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட தொடங்கினர். மணிப்பூர் பிரச்சினை தொடர்பாக கோஷங்கள் எழுப்பினர்.
அவர்களை கண்டுகொள்ளாமல், 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானத்தை சபாநாயகர் ஓம்பிர்லா வாசித்தார். 1945-ம் ஆண்டு இதே நாளில், ஜப்பானில் ஹிரோஷிமா, நாகாசாகி ஆகிய நகரங்கள் மீது அணுகுண்டு வீசப்பட்டதில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானத்தையும் வாசித்தார்.
பின்னர், உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
ஒத்திவைப்பு
அதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் மணிப்பூர் பிரச்சினைக்காக அமளியில் ஈடுபட்டனர்.
அதற்கு மத்தியில் கேள்வி நேரத்தை சபாநாயகர் தொடங்கினாா். பட்டியலில் உள்ள 20 கேள்விகளும் கேட்கப்பட்டன. இந்த கூட்டத்தொடரில் முதல் முறையாக 45 நிமிடங்களுக்கு கேள்வி நேரம் நடந்தது. பிறகு, சபையை பகல் 12 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
பிரதமர் செல்லவில்லை
பகல் 12 மணிக்கு சபை மீண்டும் கூடியபோது, நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான 2-வது நாள் விவாதம் தொடங்கியது.
4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் எம்.பி. ஆகியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நேற்று முதல் முறையாக மக்களவையில் பேசினார். நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:-
சில நாட்களுக்கு முன்பு நான் மணிப்பூர் சென்றேன். நமது பிரதமர் அங்கு செல்லவில்லை. இப்போதுவரை அவர் ஏன் செல்லவில்லை?. மணிப்பூர், இந்தியாவில் இருப்பதாகவே அவர் கருதவில்லை.
நான் மணிப்பூர் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். ஆனால், உண்மையில் மணிப்பூரே இல்லை. அதை இரண்டாக பிளந்து விட்டீர்கள்.
குழந்தை சுட்டுக்கொலை
நான் மணிப்பூர் சென்றபோது, நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை சந்தித்தேன். ஒரு பெண்ணிடம், ''உங்களுக்கு என்ன நடந்தது?'' என்று கேட்டேன்.
அதற்கு அப்பெண், ''என் ஒரே ஆண் குழந்தையை என் கண் முன்னால் சுட்டுக்கொன்று விட்டார்கள். இரவு முழுவதும் குழந்தையின் உடலுடன் இருந்தேன். பிறகு பயந்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறினேன்'' என்று கூறினார்.
நான் அவரிடம், ''உங்களுடன் ஏதாவது எடுத்துக்கொண்டு வந்தீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு அவர், உடுத்திய துணிகளையும், ஒரு புகைப்படத்தையும் மட்டுமே எடுத்து வந்ததாக கூறினார்.
மற்றொரு பெண்ணிடமும் என்ன நடந்தது என்று கேட்டேன். அவர் உடனே மயங்கி விழுந்து விட்டார். இவை 2 உதாரணங்கள்தான்.
இந்தியாவை கொன்றுவிட்டீர்கள்
மணிப்பூரில், நீங்கள் இந்தியாவை கொலை செய்து விட்டீர்கள். உங்கள் கொள்கைகள், மணிப்பூரை கொலை செய்யவில்லை. மணிப்பூரில் உள்ள இந்தியாவை கொன்று விட்டது. மணிப்பூர் மக்களை கொலை செய்ததன் மூலம் பாரத மாதாவை கொலை செய்து விட்டீர்கள்.
நீங்கள் தேசபக்தர்கள் அல்ல, தேசவிரோதிகள்.
இவ்வாறு ராகுல்காந்தி பேசியபோது, பா.ஜனதா எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு குறுக்கிட்டு, ''வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு காங்கிரசே காரணம். எனவே, ராகுல்காந்தி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று கூறினார்.
அரியானாவிலும் முயற்சி
ராகுல்காந்தி தொடர்ந்து பேசியதாவது:-
மணிப்பூரில் ராணுவத்தை பயன்படுத்தி அமைதியை கொண்டு வந்திருக்கலாம். ஆனால் நீங்கள் ராணுவத்தை பயன்படுத்தவில்லை. இந்தியாவின் குரலை கொலை செய்து விட்டீர்கள். அதாவது, மணிப்பூரில் பாரத மாதாவை கொலை செய்து விட்டீர்கள்.
எனது தாயார் (சோனியாகாந்தி) இங்கு அமர்ந்திருக்கிறார். இன்னொரு தாயாரான பாரத மாதாவை மணிப்பூரில் கொன்று விட்டீர்கள்.
எங்கு பார்த்தாலும் மண்எண்ணெயை தெளித்து விட்டு, தீவைத்து விட்டீர்கள். அதே காரியத்தை இப்போது அரியானாவில் முயற்சி செய்கிறீர்கள்.
மேகநாதன், கும்பகர்ணன் ஆகிய 2 பேர் பேச்சைத்தான் ராவணன் கேட்டான். அதுபோல், அமித்ஷா, அதானி ஆகிய 2 பேர் பேச்சைத்தான் பிரதமர் மோடி கேட்கிறார்.
சபாநாயகருக்கு நன்றி
என்னை மீண்டும் எம்.பி. பதவியில் அமர்த்திய சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த முறை நான் பேசியபோது, உங்களுக்கும் (ஓம்பிர்லா) வேதனையை ஏற்படுத்தி விட்டேன்.
நான் அதானியை குறிவைத்துத்தான் தீவிரமாக பேசினேன். அது உங்கள் மூத்த தலைவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது. உங்களையும் அது பாதித்து விட்டது. அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
நான் உண்மையை மட்டுமே பேசினேன். இன்று நான் அதானி பற்றி பேசப்போவதில்லை. எனவே, பா.ஜனதா நண்பர்கள் பயப்பட வேண்டாம்.
சிறை செல்ல தயார்
நான் நாட்டின் ஒருமுனையில் இருந்து மறுமுனை வரை பாதயாத்திரை நடத்தினேன். கடலோர பகுதியில் இருந்து காஷ்மீரின் பனிமலை வரை சென்றேன். பாதயாத்திரை இன்னும் முடியவில்லை.
நான் அதை தொடங்கியபோது, பலர் என்னிடம், ''ஏன் நடக்கிறீர்கள்? உங்கள் நோக்கம் என்ன?'' என்று கேட்டனர். ஆனால் எனக்கு தெரியவில்லை.
ஆனால், நான் நேசிக்கும் விஷயத்தை விரைவிலேயே புரிந்து கொண்டேன். அந்த விஷயத்துக்காக உயிரை விடவும் தயார். மோடி விரும்பினால் சிறைக்கு செல்லவும் தயார். அந்த விஷயத்துக்காக 10 ஆண்டுகளாக பா.ஜனதாவினரின் வசைமொழிகளை கேட்டு வருகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமளி
ராகுல்காந்தி பேசி முடித்தவுடன், பா.ஜனதா எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். 'மோடி மோடி' என்று குரல் கொடுத்தனர். எதிர்க்கட்சி எம்.பி.க்களும் போட்டி முழக்கம் எழுப்பினர்.
ராகுல்காந்தி 30 நிமிட நேரம் பேசினார். அவரது பேச்சை பார்வையாளர் மாடத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்கள் கவனித்தனர்.