ஓய்வுபெற்ற உளவுப்பிரிவு அதிகாரி கொலையில் வாலிபர் கைது


ஓய்வுபெற்ற உளவுப்பிரிவு அதிகாரி கொலையில் வாலிபர் கைது
x

மைசூருவில் ஓய்வுபெற்ற உளவுப்பிரிவு அதிகாரி கொலையில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் முக்கிய குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மைசூரு

ஓய்வுபெற்ற உளவுப்பிரிவு அதிகாரி கொலை

மைசூரு குவெம்பு நகரை சேர்ந்தவர் ஆர்.என்.குல்கர்னி. ஓய்வுபெற்ற உளவுப்பிரிவு அதிகாரியான இவர், கடந்த 4-ந்தேதி மானசா கங்கோத்திரி பகுதியில் நடைபயிற்சி செய்ய சென்றார். அப்போது அங்கு வந்த கார், அவர் மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். முதலில் விபத்து என்று கூறப்பட்ட நிலையில், அவர் திட்டமிட்டு காரை ஏற்றி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

மேலும் அவர் மீது காரை ஏற்றிய கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில், ஓய்வுபெற்ற உளவுப்பிரிவு அதிகாரி கொலையில் வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வாலிபர் கைது

இதுகுறித்து மைசூரு மாநகர போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மைசூருவை சேர்ந்த ஓய்வுபெற்ற உளவுப்பிரிவு அதிகாரி குல்கர்னி, காரை ஏற்றி கொலை செய்யப்பட்டார். முதலில் விபத்து என்று கூறப்பட்ட நிலையில், அதன்பிறகு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மர்மநபர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்தனர். குல்கர்னியை 2 பேர் காரை ஏற்றி கொன்றது தெரியவந்தது. இதில், அருண்குமார் (வயது 32) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய குற்றவாளியான மனு (30) என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

குடும்ப சண்டை

கைதானவரிடம் நடத்திய விசாரணையில், முக்கிய குற்றவாளியான மனுவின் வீடும், குல்கர்னியின் வீடும் பக்கத்து, பக்கத்தில் உள்ளது. இதனால் மனுவின் தந்தை மாதப்பா மற்றும் குல்கர்னி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனு, குல்கர்னியை கொலை செய்ய திட்டம் தீட்டினார். இதுபற்றி தனது நண்பர் அருண்கவுடாவிடம் தெரிவித்தார். அதன்படி அவர்கள் கடந்த 4-ந்தேதி, நடைபயிற்சி சென்ற குல்கர்னியை காரை ஏற்றி கொன்றுவிட்டு தப்பி சென்றுவிட்டனர். மனு தலைமறைவாக உள்ளதால், அவரது தந்தை மாதப்பாவை பிடித்து விசாரித்து வருகிறோம்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு உண்மையை கண்டறிந்த போலீசாரை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story