யூடியூப் பிரபலம் மணிஷ் காஷ்யப் மனு: தமிழ்நாடு அரசு பதில் மனுவுக்கு கூடுதல் அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி யூடியூப் பிரபலம் மணிஷ் காஷ்யப் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி,
வடமாநில தொழிலாளர்கள் குறித்த போலி விடியோ வெளியிட்ட விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி யூடியூப் பிரபலம் மணிஷ் காஷ்யப் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த 21-ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது தமிழ்நாடு அரசின் வாதத்தை பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மணிஷ் காஷ்யப் மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும். மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை அவரை மதுரை மத்திய சிறையில் இருந்து வேறு எங்கும் கொண்டு செல்லக்கூடாது என்றும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. விசாரணையை ஏப்ரல் 28-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.
இந்த நிலையில் இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் தேவை என தமிழக அரசின் கூடுதல் தலைமை வக்கீல் அமித் ஆனந்த் திவாரி கோரினார். அதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு கூடுதல் அவகாசம் வழங்கி விசாரணையை அடுத்த மாதம் 8-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.