ராணுவ மரியாதையுடன் 'ஜூம்' மோப்ப நாய் உடல் அடக்கம்...!


ராணுவ மரியாதையுடன் ஜூம் மோப்ப நாய் உடல் அடக்கம்...!
x

ராணுவ மரியாதையுடன் ‘ஜூம்’ மோப்ப நாய் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஜம்முகாஷ்மீர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் தங்பவா பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது.

இதனையடுத்து அந்த வீட்டை நோக்கி ராணுவத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற நாய் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. ஜூம் என்ற பெயர் கொண்ட அந்த நாய் மிகவும் ஆக்ரோஷம் வாய்ந்தது. பயங்கரவாதிகளை கண்டறிந்து அவர்களை மட்டுப்படுத்த தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜூம் பயங்கரவாதிகள் இருந்த வீட்டிற்குள் நைசாக நுழைந்தது. இதனை கண்ட பயங்கரவாதிகள் அதன் மீது இரண்டு துப்பாக்கி குண்டுகளை துளைத்தனர். எனினும், பயங்கரவாதிகளை கடுமையாக தாக்கி அவர்களை நிலைகுலைய செய்தது. அந்த இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

அதையடுத்து படுகாயங்களுடன் ஜூம் நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சையும் வழங்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 12 மணியளவில் ஜூம் உயிரிழந்தது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தேடுதலில், 2 குண்டுகளை உடலில் வாங்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ராணுவ மோப்ப நாய் ஜூம் உடல் ராணுவ மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக ஜம்மு காஷ்மீரின் ராணுவ அலுவலகத்தில் நாய் ஜூம் உடலுக்கு ராணுவ உயர் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். ராணுவ வீரர்களும் அஞ்சலி செலுத்தினர்.


Next Story