தினம் ஒரு தகவல் ; கட்டுமான கழிவுகள் மேலாண்மை


தினம் ஒரு தகவல் ; கட்டுமான கழிவுகள் மேலாண்மை
x
தினத்தந்தி 15 July 2020 6:18 AM GMT (Updated: 15 July 2020 6:18 AM GMT)

மக்கள்தொகை, விவசாயம் மற்றும் இதர கைத்தொழில்களை செய்வதற்கு கிராமங்களில் வழி இல்லாத நிலையில் நகரத்தை நோக்கி இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

பிரதான நகர பகுதிகள் மட்டுமில்லாமல், புறநகர் பகுதிகளிலும் அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானங்கள் பரவலாக நடக்கின்றன. பெருகிவரும் கட்டுமானங்களுக்கு ஏற்ப, கட்டுமான கழிவுகள் மேலாண்மை அவசியம். ஆனால் தமிழகத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலுமே கட்டுமான கழிவு மேலாண்மையின் நிலை பரிதாபத்துக்கு உரியதாகவே இருக்கிறது.

இந்தியாவில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் சராசரியாக 10 முதல் 12 மில்லியன் டன் கட்டுமான கழிவுகளை உண்டாக்குகின்றன. ஆனால் அந்த கழிவுகளில் இருந்து 50 சதவீதம்கூட மறுசுழற்சி செய்யப்படுவது இல்லை. பொதுவாக மூன்று நிலைகளில் கட்டுமான கழிவுகள் உண்டாகின்றன. சாக்கு பைகள், பெயின்ட் டப்பாக்கள், கம்பிகள், தரைக்கு பயன்படுத்தும் டைல்ஸ் மற்றும் கூரை அமைப்பதற்காக பயன்படுத்தும் சென்டிரிங் உபகரணங்கள் போன்றவற்றின் பயன்பாட்டுக்கு பின் உண்டாகும் உதிரிப்பொருட்கள் ஸ்கிராப்கள் எனப்படும். இதில் கான்கிரீட், இரும்பு, பிளாஸ்டிக் போன்ற அனைத்தும் இருக்கும். இதில் சில பொருட்களை மறு பயன்பாட்டுக்கும் உட்படுத்தலாம்.

பிற நாடுகளில், கட்டுமானக் கழிவு மேலாண்மை விஷயத்தில் அங்கு நடக்கும் முன்னேற்றங்களை நாமும் பின்பற்றலாம். லண்டன் ஒலிம்பிக் ஸ்டேடியத்தின் கட்டுமானத்தில் 30 சதவீதம், கட்டுமான கழிவில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட கான்கிரீட் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மறுபயன்பாட்டுக்கு தேவைப்படுவதை கட்டுமான கழிவில் இருந்தே பெறுகிறது, சிங்கப்பூர். ஜப்பானில் கட்டுமான கழிவுகளை மறுசுழற்சி செய்து சாலைகள் தயாரிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள்.

Next Story