உலக அமைதிக்கு வழிகாட்டி லியோ டால்ஸ்டாய்


உலக அமைதிக்கு வழிகாட்டி லியோ டால்ஸ்டாய்
x
தினத்தந்தி 28 Aug 2019 5:50 AM GMT (Updated: 28 Aug 2019 5:50 AM GMT)

ரஷியாவின் புகழ்பெற்ற எழுத்தாளரும், நாவலாசிரியருமான லியோ டால்ஸ்டாய், உலக அமைதிக்கும் உலக மக்களின் ஒற்றுமைக்கும் அயராது பாடுபட்ட மாமனிதர்.

ன்று (ஆகஸ்டு 28-ந்தேதி) பிரபல ரஷிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் பிறந்த நாள்.

ரஷியாவின் புகழ்பெற்ற எழுத்தாளரும், நாவலாசிரியருமான லியோ டால்ஸ்டாய், உலக அமைதிக்கும் உலக மக்களின் ஒற்றுமைக்கும் அயராது பாடுபட்ட மாமனிதர். அவரது ‘போர் மற்றும் அமைதி’ மற்றும் ‘அன்னாகாரனினா’ நாவல்கள் மூலம் உலக அமைதியை வலியுறுத்தினார். திருவள்ளுவரை அவர் உயர்வாக மதித்தார். திருக்குறளின் வாய்மை, இன்னாசெய்யாமை அதிகாரங்கள் அவரை மிகவும் கவர்ந்தவை என்று குறிப்பிடுவார். நமது தேசத்தந்தை மகாத்மாகாந்தி அவரை தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டார்.

ரஷியாவில் உள்ள ஒரு சிறிய ஊரில் 1828-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி டால்ஸ்டாய் பிறந்தார். அவருடைய பெற்றோர்களுக்கு 5 மகன்கள். அதில் 4-வதாக பிறந்தவர் தான் டால்ஸ்டாய். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். இவர் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வரலாறும், ஜெர்மன் மொழியும் எடுத்துப்படித்தார். ஆனால் அதில் அவர் தேர்ச்சி பெறவில்லை. பிறகு சட்டக்கல்வியை பயின்றார். அதன்பிறகு சில காலம் விவசாயத்தில் ஈடுபட்டார். சிறுவயதில் பெற்றோர்களை இழந்ததால் உறவினர்களால் வளர்க்கப்பட்டார் டால்ஸ்டாய். இளமைக்காலங்களில் சில வருடங்கள் கட்டுப்பாடில்லாமல் மனம் போனபடி தவறான செய்கையில் ஈடுபட்டார். அதன் காரணமாக வியாதியால் அவதிப்பட்டார். எந்தவித பொறுப்புகளும் இல்லாமல் சோம்பேறித்தனமாக சுற்றித்திரியாமல் ராணுவத்தில் சேர்ந்தார்.

டால்ஸ்டாய் தன்னுடைய 34-வது வயதில் சோபியா என்ற பெண்ணை திருமணம் செய்தார். சோபியாவுக்கு அப்போது வயது 16. டால்ஸ்டாய் பார்ப்பதற்கு அழகான தோற்றம் இல்லாதவர். 34 வயதிற்குள் பற்கள் கொட்டிவிட்டன. ஆனால் சோபியாவோ அழகான பெண். டால்ஸ்டாய் கிராமத்தில் வாழ்ந்தவர். சோபியா தலைநகரமான மாஸ்கோவில் வளர்ந்தவர். அதுவும் பணக்கார டாக்டரின் மகள். இவரோ ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். இந்த காரணங்களே அவர்கள் இருவரின் வாழ்க்கை துயரமாக அமைந்ததற்கான காரணங்களாகும். எனவே வீட்டில் தினமும் சண்டை சச்சரவுகளுடன் 48 ஆண்டுகள் வாழ்ந்தார். இவ்வளவு சண்டை சச்சரவுகளுக்குமிடையே 13 பிள்ளைகளைப் பெற்றனர்.

தாய் மொழியான ரஷிய மொழியுடன் ஆங்கிலம், லத்தீன், ஜெர்மனி, பிரெஞ்சு, ஆகிய மொழிகளைக் கற்றுத்தேர்ந்தார். டால்ஸ்டாய்க்கு சூதாட்ட பழக்கம் உண்டு. அதனால் அவருக்கு அதிகக்கடன் சுமை ஏற்பட்டது. அதோடு காமக் களியாட்டங்களிலும் ஈடுபட்டார். பல இன்னல்களுக்கு இடையில் நாவல்களை எழுதிக்கொண்டு இருந்தார். டால்ஸ்டாய் அதிகாலையில் எழுந்து விடுவார். நீண்ட தூரம் நடைபயிற்சி செய்வார். கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து தோட்டத்துக்குப் பாய்ச்சுவார். வயதான காலத்தில் கூட உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டினார்.

ஒழுங்காக வாழ்க்கையில் இருப்பதே குறிக்கோளாக நான் கொண்டதால் எனக்கு கடவுள் தேவை இல்லாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் கடவுள் என்று ஒருவர் உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. அதே சமயம் கடவுள் எப்படி இருப்பார் அவருடைய சக்தி எந்த அளவுக்கு இருக்கிறது. இந்த பிரபஞ்சத்தை அவர் எப்போது உருவாக்கினார். உருவாக்கியதற்கான காரணம் என்ன என்று எனக்கு இன்றுவரை தெரியவில்லை என்றார்.

டால்ஸ்டாய்க்கு அவருடைய 18-வது வயதிலேயே தத்துவ ஞானம் பற்றி கட்டுரை எழுதும் அளவுக்கு அறிவு இருந்தது. ஒரு நாள் கூட இரவில் படிக்காமல் இருக்கமாட்டார். படிக்கும் போது அறையை அடைத்துவிடுவார். மனைவி, குழந்தைகள், நெருங்கிய நண்பர்கள் உள்பட யாரையும் உள்ளே வர அனுமதிக்கமாட்டார். நாள்தோறும் பல்வேறு அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை படிப்பார். இந்தப்பழக்கம் அவரது இறுதி நாள் வரை இருந்தது. டால்ஸ்டாய் ‘அன்னாகாரனினா’ என்ற புகழ்பெற்ற நாவலை எழுதினார். அந்தக்கதை அவரது வாழ்க்கையோடு ஒத்துப்போனது.

பெண்கள் எதற்குமே ஒத்து வர மாட்டார்கள். அவர்களிடம் இருந்து விலகி விடுங்கள். மனிதனின் மன உறுதிக்கும், மன அமைதிக்கும் இடையூறாக இருப்பது பெண் இனம் தான் என்றார் டால்ஸ்டாய். தன்னுடைய 82-வது வயதில் ஒருநாள் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறினார். தன் மகளிடம் மட்டுமே சொல்லிவிட்டு சென்றார். மனைவிக்கு அவர் ஒரு கடிதம் எழுதி வைத்து இருந்தார். அதில் ‘கடந்த 48 ஆண்டுகளாக நீ என்னுடன் நட்பாக இருந்து இல்லறம் நடத்தியதற்காக உனக்கு என்னுடைய நன்றி’ என்று எழுதப்பட்டு இருந்தது.

டால்ஸ்டாய் எழுதி வைத்த உயில் வித்தியாசமாக இருந்தது. அதில் இடம் பெற்ற வாசகங்கள் வருமாறு:-

“நான் எங்கு இறந்தாலும், நகரமாக இருந்தால் மிக எளிமையான கல்லறைத் தோட்டத்தில் என்னுடைய உடலை புதையுங்கள். ஒரு வேளை கிராமத்தில் இறந்து விட்டால் பிச்சைக்காரர்களைப் புதைப்பது போல மிகவும் மலிவான சவப்பெட்டியில் வைத்து புதையுங்கள். என்னுடைய உடலின் மீது மலர் வளையம் எதுவும் வைக்க வேண்டாம். இரங்கல் உரை என்ற பெயரில் என்னைப்புகழ்ந்து பேச வேண்டாம்.

சவ அடக்கத்துக்காக எந்தவித செலவுமே செய்ய வேண்டாம். எல்லாமே மிகவும் எளிமையாக இருக்க வேண்டும்.” என்று எழுதி இருந்தார்.

வீட்டை விட்டு வெளியேறிய பின் டால்ஸ்டாய் ரெயில் பயணத்தின் போது கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் ஒரு ரெயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டார். மரணம் அவரை நெருங்கியது. அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு அவர்கள் விரைந்து வந்தனர். மரண படுக்கையில் டால்ஸ்டாய் தன் மகளிடம் அன்புமகளே, உன்னுடைய தந்தையை மட்டுமே நினைத்துக் கொண்டு கவலைப்பட்டு கொண்டு இருக்காதே. உலகில் என்னைப்போல் பலகோடி மக்கள் இருக்கின்றனர் என்பதை மறந்துவிடாதே என்றார். இது தான் டால்ஸ்டாயின் கடைசி சொற்கள். 1910-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ந்தேதி தன்னுடைய 82-வது வயதில் மரணமடைந்தார்.

-நடிகர் ராஜேஷ்

Next Story