தொல்லியல் ஆய்வு செய்யப்பட வேண்டிய தென் தமிழகம்


தொல்லியல் ஆய்வு செய்யப்பட வேண்டிய தென் தமிழகம்
x
தினத்தந்தி 25 Oct 2019 8:08 AM GMT (Updated: 25 Oct 2019 8:08 AM GMT)

தமிழர்களுக்கு வரலாற்று உணர்வு மேம்பட்டு வரும் காலம் இது. கீழடி அகழாய்வு தமிழர் வரலாற்றில் புதிய சகாப்தம் படைத்துள்ளது. கீழடியைப் போலவே தமிழகத்தின் தென்பகுதி ஆராயப்பட்டால் புதிய உண்மைகள் தெரிய வரும்.

 வரலாற்று அறிஞர் வின்சென்ட் சுமித் “இந்திய வரலாறு உண்மையில் கங்கைக்கரையில் இருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதை விட காவிரிக் கரையில் இருந்து தொடங்கப்பட வேண்டும்” என்று கூறுவார். ஆனால் குமரி முனையில் இருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதுதான் உண்மை.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் குமரிமுனையில் இருந்து ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா கண்டங்கள் வரை நிலப்பரப்பு நீண்டு இருந்தது. தமிழர் வாழ்ந்த பகுதி இது. இங்குதான் முதன் முதலில் லெமூர் என்னும் மனிதக் குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்பர் உயிரியல் ஆய்வாளர்கள். இப்பகுதியில் பாண்டிய மன்னர்கள் சங்கங்கள் அமைத்துத் தமிழ் இலக்கியங்களை வெளியிட்டனர். ஆனால் கடல் கொந்தளிப்புகளால் இப்பரப்பும், சங்கங்களும் அழிந்தன. ஏழ்பனை நாடு, ஏழ் தெங்கு நாடு, முன்பாலை நாடு, பின்பாலை நாடு, முன்பனிநாடு, பின்பனி நாடு, குமரி மலை, குமரி ஆறு, பநுனி ஆறு, பநுனிமலை, அரண்மனைகள், வாழ்விடங்கள் அழிந்தன.

முதல் சங்கம் கடல் கொண்ட தென்மதுரையிலும், இரண்டாம் சங்கம் கடல் கொண்ட கபாடபுரத்திலும் இருந்தன. இதன் பின் மூன்றாம் சங்கம் இன்றைய மதுரையில் அமைத்தனர் எண்ணற்ற புலவர்கள். இச்சங்கத்தில் இருந்து பாடல்கள் பாடினர் எண்ணற்ற அரசர்கள். இச்சங்கங்களைப் பாதுகாத்தனர். இச்சங்கங்களில் உருவான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்னும் இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தொல்காப்பியம், அகத்தியம், முதுநாரை, முதுகுருடு போன்ற நூல்களும் இங்கிருந்து எழுதப்பட்டன என்பர். இறையனார் அகப்பொருள் உரை, சிலப்பதிகாரம் அடியாருக்கு நல்லார் உரை, சங்க இலக்கியங்கள், வெளிநாட்டார் குறிப்புகள், செப்பேடுகள் ஆகியன சங்கங்கள் இருந்தமையை உறுதிப்படுத்துகின்றன. ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள நாடோடி இனத்தார் இன்றும் கடலால் அழிந்து போன செய்தியை நாடோடிப் பாடலாகப் பாடுகின்றனர்.

இரண்டு கடல்கோள்களால் இப்பகுதி அழிந்தது. இந்த இடம் ‘லெமூரியா கண்டம்’ என்று அழைக்கப்படுகிறது. குமரி முனைக்குத் தெற்கே கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கடல் தெளிவாக இருக்கும் போது கடலுக்கு அடியில் அழிந்து போன கட்டிடப் பகுதிகள் காணப்படுவதாக கூறுகின்றனர். மேலும் சில இடங்களில் மீன்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. காரணம் கட்டிடங்களுக்கு மத்தியில் மீன்கள் தங்கி இனப்பெருக்கம் செய்ய வசதியாக உள்ளது என்பர். கபாடபுரம் அழிந்த பின் சில ஆண்டுகள் கொற்கை அருகில் உள்ள மணலூரில் சங்கம் இருந்தது என்பர். கபாடபுரம் முற்றிலும் அழியவில்லை. அழியாத பகுதி இன்றைய திருச்செந்தூர் என்பர். திருச்செந்தூர் பற்றிய ஆய்வேடு ஒன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உள்ளது. இது கபாடபுரம் தான் திருச்செந்தூர் என்று சான்றுகளுடன் நிறுவி உள்ளது. வால்மீகி ராமாயணத்தில் சான்றுகள் உள்ளன என்பர். இப்பகுதி கடலக அகழாய்வு செய்யப்பட்டால் பல புதிய உண்மைகள் வெளிவரும். பூம்புகாரில் செய்யப்பட்ட கடலக அகழாய்வு போல் இப்பகுதியில் ஆய்வு அறிவியல் முறைப்படி நடத்தப்பட வேண்டும்.

கி.மு. பத்தாம் நூற்றாண்டில் எபிரேய நாட்டை ஆண்ட சாலமோன் மன்னன் காலத்தில் தமிழகத்து உவரியில் இருந்து ஏலம், சந்தனம், அகில், மயில்தோகை, அரிசி, முத்து, தேக்கு, திப்பிலி போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக எபிரேய வரலாற்று நூல்கள் கூறுகின்றன. ஏபிரேயத்தின் தலைநகரின் பெயர் “ஊர்” என்ற தமிழ்ப்பெயராக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உவரி-ஓட்ர் என்றும் அகில்-ஆல்மக் என்றும், அரிசி-ஓரிசி என்றும், தோகை-தக்கீம் என்றும், திப்பிலி-பீர்பெல் என்றும், ஏலம்-ஏல் என்றும், அப்பா-அப் என்றும், பாதை-பாத் என்றும் எபிரேய மொழியில் ஒலிக்கப்படுகிறது. எபிரேயாவும், உவரியும் கொண்டிருந்த வாணிகத் தொடர்பு இதனால் உறுதி செய்யப்படுகிறது. ‘ஊர்’ என்று எபிரேய இடத்தில் செய்யப்பட்ட அகழாய்வில் அரிசி, முத்து, தேக்கு, தகை, திப்பிலி, ஏலம், தேக்கு, சந்தனம் ஆகியவற்றின் சிதறல்கள் கிடைத்துள்ளமை எண்ணத்தக்கது. உவரி இன்று சிற்றூராகி கீழ் உவரி, மேல் உவரி, நாடார் உவரி, பரதவர் உவரி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. உவரி கடற்கரையும், இந்த ஊர்களும் அகழாய்வுகள் மற்றும் மின் காந்தவியல் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செம்மண் மணல்மேடுகளும், செம்மலை பரப்புகளும் குறிப்பிடத்தக்கவை. அரண்மனைகள், கட்டிடங்கள், பழஞ்சின்னங்கள், முதுமக்கள் தாழிகள், நடுகற்கள், சதிக்கற்கள், பழமையான கோவில்கள், கிணறுகள் இவற்றுள் புதைந்து கிடப்பதாக கருதப்படுகிறது. புதைந்து போன சில கோவில்கள் இப்பகுதியில் மண்ணைத் தோண்டி மீட்கப்பட்டுள்ளன. காயாமொழி, பூச்சிக்காடு, வெள்ளாளன் விளை, மாநாடு, தண்டுபத்து, இடையன் விளை, பாட்டக்கரை, நாசரேத், பரமன்குறிச்சி, குருநாதபுரம், மெஞ்ஞானபுரம், உடன்குடி பகுதித் தேரிகள் ஆராயப்பட வேண்டும். நடுகல், தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பலநூறு ஆண்டுகளுக்கு முன் பெரிய சூறைக்காற்று, பேய்மழை, புயல் ஆகியவற்றால் இப்பகுதி மண்ணால் மூடப்பட்டது என்பர். இப்பகுதியில் மன்னர்கள் ஆட்சிப்புரிந்தனர் என்பார்கள். செம்மண், மணல் கட்டிகள், மண் பாறைகள், பனைமரங்கள், முந்திரி மரங்கள், உடைமரங்கள் இங்கு நிறைந்துள்ளன. ஆராயப்பட வேண்டிய பகுதி இது. சாயர்புரம், செவத்தையாபுரம் பகுதிகளில் உள்ள செம்மண் பரப்புகளும் ஆராயப்பட வேண்டும்.

இப்பகுதிகள் கற்கருவிகள், பழங்காலப் பானை ஓடுகள், அம்மி, ஆட்டுரல், கற்கோடரி ஆகியன கிடைத்துள்ளன. பழைய கற்கால மக்கள் வாழ்ந்த அறிகுறிகள் உண்டு. மிகப் பழைய காலத்து நுண் உயிரிகள் இங்குள்ள மணல், கல் ஆகியவற்றில் காணப்படுவதாக உயிரியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

மார்ட்டிமர் யீவ்ஸ், மார்ட்டிமர் வீலர் ஆகிய வெளிநாட்டு ஆய்வாளர்கள் இங்கு ஆய்வுகள் செய்துள்ளனர். செவத்தையாபுரத்தை அடுத்த வயல் பகுதிகளின் அடியில் கடல் மண் காணப்படுகிறது. சங்குகள், பழங்கால திரிகைகள், அம்மி, ஆட்டுரல் போன்ற பொருட்கள் கிணறு தோண்டும்போது கிடைப்பதாக கூறுகின்றனர். விரிவான ஆய்வு மேற்கொண்டால் பல உண்மைகள் தெரிய வரும். முத்துக்குளித்தல், முத்து வணிகம், வெளிநாட்டு வணிகம் ஆகியவற்றில் சிறந்திருந்த இடம் கொற்கை, காயல் ஆகியன. இங்கு கால்டுவெல், மார்ட்டிமர் வீலர், மார்ட்டிமர் யீவ்ஸ் மற்றும் தமிழ்நாடு அரசு தொல் பொருள் துறையினர் ஆகியோர் ஆய்வு செய்து கட்டிடங்களின் அடிப்பகுதி, ரோமானியப் பான ஓடுகள், பழைய தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட ஓடுகள் ஆகியவற்றைக் கண்டு பிடித்தனர். இந்த எழுத்துகள் கீழடியில் கிடைத்த எழுத்துகள் போலவும் சிந்துவெளி, எழுத்துகள் போலவும் அமைந்துள்ளன. கொற்கை முழுமையாக அகழாய்வு செய்யப்பட வேண்டும்.

கொற்கைக்கு அருகில் உள்ள பழையகாயலில் ரோம நாணயங்கள், அரேபிய நாணயங்கள் கிடைத்துள்ளன. கொற்கையிலும் அருகில் உள்ள அக்கசாலையிலும் பண்டைய தமிழ் அரசர்கள் நாணயங்களும், ரோமானிய நாணயங்களும் கிடைத்துள்ளன. மஞ்சள் நீர்க்காயல் கொற்கை அரசிகள் நீராடிய இடம் என்பர். புன்னைக்காயல், அகழிக்கரை சுவாமி கோவில், கோட்டைவாழ் அய்யன் கோவில், அகரம், மாறமங்கலம், மணலூர், பெரும்படை சாத்தான் கோவில், சிறுத்தண்டு நல்லூர் ஆகிய பகுதிகளும் முழுமையாக ஆராயப்பட வேண்டும். ஆதிச்சநல்லூர், மீண்டும் ஆராயப்பட வேண்டும். சிவகளை, முடி வைத்தான், ஏந்தல் போன்ற இடங்களில் நடுகல், சதிக்கற்கள் பல கிடைப்பதால் ஆராயப்பட வேண்டும். முழுமையாக ஆராயப்பட்டால் முழுமையாக வரலாறு தெரியும்.

- முனைவர் அ.பாஸ்கர பால்பாண்டியன், திருச்செந்தூர், முன்னாள் கல்வெட்டாய்வாளர், தொல்லியல்துறை.

Next Story