நற்பண்பு வளர்க்கும் சாரணர் இயக்கம்


நற்பண்பு வளர்க்கும் சாரணர் இயக்கம்
x
தினத்தந்தி 24 Jan 2020 5:19 PM IST (Updated: 24 Jan 2020 5:19 PM IST)
t-max-icont-min-icon

குட்டீஸ், உங்களுக்கு சாரணர் இயக்கம் பற்றித் தெரியுமா? நீங்கள் பள்ளியில் சாரணர் இயக்கத்தில் சேர்ந்திருக்கிறீர்களா? உலகளாவிய மாணவர் இயக்கமான சாரணர் இயக்கத்தின் முதல் குழு உதயமான நாள் இது.

1908ல், இதேநாளில்தான் (ஜனவரி24) முதல் சாரணர் குழு உருவாக்கப்பட்டது. சாரணர் இயக்கத்தின் அருமை பெருமைகளை இந்த வாரம் தெரிந்து கொள்வோமா?...

சாரணர் இயக்கம், உலக அளவிலான இளைஞர் இயக்கங்களில் ஒன்றாகும். உலக பேரியக்கங்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது. இந்த இயக்கத்தை 1907-ல் பேடன் பவல் என்பவர் இங்கிலாந்தில் உருவாக்கினார். இந்த இயக்கத்தின் செயல்பாடாக, 1908-ம் ஆண்டு ஜனவரி 24-ல் ஆண்கள் சாரணர் குழுவை அவர் உருவாக்கினார். ‘பாய் ஸ்கவுட்ஸ்’ என்று அழைக்கப்பட்ட இதுவே முதல் சாரணர் படையாகும்.

நாளைய குடிமக்களான இளைய தலைமுறையினருக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கீழ்ப்படிதல், பெரியோரை மதித்து நடத்தல் போன்ற நற்பண்புகளை வளர்க்கும் இயக்கமாக சாரணர் இயக்கம் தோன்றியது. ராணுவ கட்டுக்கோப்பு இளைய தலைமுறையினரிடம் வளர வேண்டும் என்ற நோக்கத்துடன் ராணுவ வீரரான பேடன் பவல், இந்த இயக்கத்தை செயல் படுத்தினார். அவரது முழு பெயர் ராபர்ட் ஸ்டீபன்சன் ஸ்மித் பேடன் பவல் என்பதாகும். இவரை பேடன் பவல் பிரபு என்று சிறப்பித்து அழைப்பதும் உண்டு.

அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த இயக்கம் மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியது. 1909-ல் இந்தியாவிலும், சிலி நாட்டிலும், 1910-ல் அமெரிக்காவிலும் சாரணர் குழு உருவானது. 10 ஆண்டுகளுக்குள்ளாகவே உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு இந்த இயக்கம் விரிவடைந்துவிட்டது.

நாட்டுப்பற்று, இறைப்பற்று, அன்பு, கருணை, பணிவு, பிறருக்கு உதவி செய்தல், தன்னம்பிக்கை முதலான பண்புகளை சிறுவர்களிடத்தில் வளர்த்து அவர்களை சிறந்த குடிமக்களாக உயர்த்துவதே சாரணர் இயக்கத்தின் நோக்கமாகும்.

நற்பண்புகளை வளர்ப்பதுடன், உற்றுநோக்குதல், அறிவுத்திறனை வளர்த்தல், கைவினைப் பொருட்களை செய்தல் போன்ற பல்வேறு திறன் வளர்ப்பிலும் இந்த இயக்கம் கவனம் செலுத்தியது.

சிறுவயதில், மாணவப் பருவத்தில் இந்த இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெறுபவர்கள் தன்னம்பிக்கையும், நற்பண்பும் மிக்கவர்களாக வளர்வதுடன், மற்றவர்களை சகோதரர்களாக மதிக்கும் மாண்புடையவர்களாக உயர்கிறார்கள். இயற்கை மற்றும் விலங்கு நேசம் கொண்டவர்களாகவும், நாட்டுப் பற்று மிக்கவர்களாகவும் இவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். எண்ணம், செயல், வாக்கு ஆகியவற்றில் தூய்மை கொண்டவர்களாகவும் இளைய தலைமுறையினரை மாற்றுகிறது சாரணர் இயக்கம்.

சாரணர் இயக்கம் குருளையர், சாரணர், திரிசாரணர் என மூன்று பிரிவுகளாக உள்ளது. சாரண மாணவர்களை பயிற்றுவிப்பவர்கள் ‘ஸ்கவுட் மாஸ்டர்’கள் எனப்படுகிறார்கள். சாரணிய மாணவிகளை பயிற்றுவிக்கும் ஆசிரியைகள் ‘கைடு கேப்டன்’கள் எனப்படுகிறார்கள். தற்போது உலகம் முழுவதும் 50 கோடி பேர் சாரண இயக்கத்தில் உள்ளனர்.

சாரண சாரணியர் களுக்கு பல்வேறு பயிற்சிகளின் மூலம் மேற்காணும் திறன்கள் ஊக்குவிக்கப் படுகிறது. பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பல விருதுகளும் வழங்கப் படுகின்றன. மாநில அளவில் சாதனை படைப்பவர் களுக்கு ராஜ்யபுரஷ்கார் எனும் விருது வழங்கப்படுகிறது. இதை ஆளுநர் வழங்குவார். தேசிய அளவில் சாதனை படைக்கும் சாரண மாணவர்களுக்கு ராஷ்டிரபதி விருது வழங்கப்படுகிறது. இதை குடியரசு தலைவர் வழங்குகிறார்.

சாரணர் முகாம்களில் கலாசார நிகழ்வுகளும் இடம் பெறும். எளிய உடற்பயிற்சிகள், முதலுதவி, இன்னும் பல்வேறு பயனுள்ள பயிற்சிகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். பொது இடங்களில் நடை பெறும் முகாம்களில் மக்களும் இந்த பயிற்சிகளின் பலன்களை பெறலாம்.

அமெரிக்காவின் உளவு இயக்கமான எப்.பி.ஐ.யில் இருப்பவர்களில் 85 சதவீதம் பேர் சாரண இயக்கத்தில் பங்கெடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் 5 நாடுகளைத் தவிர பெரும்பாலான நாடுகளில் சாரணர் இயக்கம் பரவி உள்ளது. வடகொரியா, சீனா, கியூபா, லாவோஸ் மற்றும் அண்டோரா ஆகிய நாடுகளில் சாரணர் படை இல்லை.

அமெரிக்க சாரணர் இயக்கமானது வெளிநாட்டில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களின் குழந்தைகளையும் இந்த இயக்கத்தில் சேர்க்கிறது. அதேபோல வேறு நாடுகளுக்கு மாணவர் குழுவை அனுப்பி சேவை செய்வதும் உண்டு.

இந்தியாவில் 1909-ல் சாரணர் படை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஆங்கிலேய சிறுவர்கள் மட்டுமே இதில் சேர முடிந்தது. தேசிய உணர்வு கொண்ட இந்திய தலைவர்கள், இந்த இயக்கத்தின் சாயலில் வேறு பெயர்களில் இந்திய சாரணர் இயக்கங்களை நடத்தினர். 1951-க்கு பின்பு, இந்த இயக்கங்கள் அனைத்தும் `பாரத சாரண சாரணியர் சங்கம்' என்று ஒன்றிணைக்கப்பட்டது.

பேடன் பவலின் மனைவி ஒலோவ் 1912-ல், கணவரின் வழிகாட்டலில் மாணவிகளுக்கான சாரணர் படையை உருவாக்கினார். அவரது பிறந்தநாள் பிப்ரவரி 22-ந் தேதியாகும். உலகம் முழுவதும் இந்த தினத்தில் ‘உலக சாரணர் தினம்’ கொண்டாடப்படுகிறது.

சாரணர் படையில் இருப்பவர்களுக்கு பல்வேறு நிறுவனங்கள், இடங்களில் சலுகை வழங்கப்படுவது குறிப்பிடத் தக்கது. மாணவர்கள் பள்ளிப்பருவத்தில் சாரணர் இயக்கத்தில் சேர்ந்து நற்பண்புகளையும், நம்பிக்கை யையும், நாட்டப்பற்றையும் வளர்த்துக் கொள்ளலாம்.

Next Story