நகைச்சுவை என்றால் நாகேஷ்...!


நகைச்சுவை என்றால் நாகேஷ்...!
x
தினத்தந்தி 31 Jan 2020 9:55 AM GMT (Updated: 2020-01-31T15:25:50+05:30)

இன்று (ஜனவரி31-ந்தேதி) நடிகர் நாகேஷ் நினைவுதினம்.

பருப்பு இல்லாமல் சாம்பார் வைக்கமுடியாது. 1960-களில், நாகேஷ் இல்லாமல் எந்த திரைப்படமும், எம்.ஜி.ஆர். சிவாஜி படங்கள் உள்பட, தயாரிக்க முடியாது என்கிற அளவுக்கு மிகப்பிரபலமான நடிகராக திகழ்ந்தார் நாகேஷ். சிறந்த நகைச்சுவை நடிகர் என்பதோடு மிகச் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்தார். எங்கள் ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த சர்வர் சுந்தரம், மேஜர் சந்திரகாந்த், ராமு, அன்பே வா, அதே கண்கள், முதலிய எல்லா படங்களிலும் அவர் நடித்தார். எல்லா படங்களுமே வெற்றிப் படங்கள்தான்.

கே.பாலசந்தர் நாடகமாக நடத்திக் கொண்டிருந்தது தான் சர்வர் சுந்தரம். அந்த நாடகத்தை பார்த்த எங்கள் தந்தையார், அதனை படம் எடுக்க விரும்பினார். கிருஷ்ணன், பஞ்சு இயக்கத்தில், கே.பாலசந்தர் கதை, வசனம் எழுத திரைப்படம் ஆரம்பமானது.

ஒரு பாடல் காட்சியை படமாக்கும்போது அந்த பாடலை எப்படி ரெகார்டிங் செய்கிறார்கள், ரெகார்டிங் செய்யும் பாடலை, எப்படி படமாக்குகிறார்கள், நடன இயக்குனர்கள் நடிகர்களுக்கு எப்படி சொல்லித் தருகிறார்கள், அதனை எப்படி ஒளிப்பதிவு செய்கிறார்கள் என்பதையெல்லாம் ரசிகர்களுக்கு காட்டினால் புதுமையாக இருக்கும் என்று நான் முடிவு செய்தேன். அதனை இயக்குனர்கள் கிருஷ்ணனும், பஞ்சுவும் ஏற்றுக் கொண்டார்கள். இசை எம்.எஸ். விஸ்வநாதன், பாடல் எழுத வாலியை அழைத்து கம்போசிங்கில் உட்கார்ந்தோம். இதனை நாகேசுக்கும் தெரிவித்தோம். அவர் உடனே புறப்பட்டு கம்போசிங்கிற்கு வந்துவிட்டார்.

நாகேஷ் அவரைப் பார்த்ததும் வாலி குஷியாகி, வாய்யா வாய்யா, நீ கூட இருந்தாதான் மூடே வரும் என்று ஆர்வமானார். வாலி, நாகேஷ் இருவரும் ரொம்பவும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், கம்போசிங் களைகட்டியது. சிச்சுவேஷன் கேட்ட வாலி, எப்படி ஆரம்பிக்கலாம் சொல்லுய்யா என்றதும், நாகேஷ்

“அவளுக்கென்ன அழகிய முகம், அவனுக்கென்ன இளகிய மனம்” என்று அடியெடுத்து கொடுத்தார், அந்த அடியை பின்பற்றி வாலி, மளமளவென்று பாடலை எழுதி முடித்தார்.

யார் பாடுவது என்று யோசித்தோம். நாகேசுக்கு எ.எல். ராகவன்தான் எப்போதும் பாடுவது வழக்கம். அந்த நேரம், அவர் ஊரில் இல்லை. நாகேசும் டி.எம்.சவுந்தரராஜன் பாடினால் நன்றாக இருக்கும் என்று தனது விருப்பத்தை சொன்னார். அதன் பேரில் டி.எம்.எஸ். வந்தார். கம்போசிங் ஹாலில், டி.எம்.எஸ்., எம்.எஸ்.வியிடம் மெட்டு கேட்டார். பாடல் வரிகளை கேட்டார். டி.எம்.எஸ். எப்போதும் தான் பாடப்போகும் நடிகரை தெரிந்து கொண்டு அவருக்கு ஏற்றபடி தன் குரலில் மாறுதல் செய்து கொண்டு பாடுவது அவர் வழக்கம். அதன்படி, இந்தப்பாடலை தான் யாருக்காக பாடுகிறேன் என்று கேட்டார். எம்.எஸ்.வி. “நாகேஷ்” என்றார். அவர் பெயரை கேட்டதும், டி.எம்.எஸ். கேலியாக சிரித்து, அவருக்கு பாடலா? அதை நான் பாடவா, அதுக்கு இவ்வளவு பெரிய செட்டபா, என்னடா இது சோதனை, எனக்கு ஏற்பட்ட வேதனை, என்று திருவிளையாடல் டி.எஸ். பாலையா பாணியில் சலித்துக் கொண்டார்.

நாகேஷ் எல்லாம் பாடி, அதை தியேட்டர்ல உட்கார்ந்து யார் பார்க்கிறது? என்று ஏளனமாக கேட்டார். அப்போது நாகேஷ் ரெகார்டிங் ரூமிற்குள் உட்கார்ந்திருந்தார்.டி.எம்.எஸ். விமர்சனத்தை கேட்டு, அவரது முகமே மாறிவிட்டது. இருந்தும் பொறுமையாக இருந்தார். நாகேஷ் மனதில், ஒரு வைராக்கியம் உருவானது. டைரக்டர் கிருஷ்ணன், பஞ்சுவிடம் சொன்னார், ‘சார் டி.எம்.எஸ். சொன்னதை பொய்யாக்கி காட்டணும் சார்’ இந்த பாட்டுக்குன்னே ரசிகர்கள் திரும்ப திரும்ப இந்தப் படத்தை பார்க்கணும் சார். அந்த அளவுக்கு புதுப்புது விஷயங்களை இதில் சேர்க்கணும் என்று இதனை ஒரு சவாலாக ஏற்றார். டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தை மாஸ்டரா போடுங்க என்றார். அவர் இந்த மாதிரி பாடல் பண்ணுவதில் புகழ்பெற்றவர். அவர் வேறுயாரும் இல்லை, தற்போது இந்திய அளவில் டான்ஸ் மாஸ்டராக, ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் பிரபுதேவாவின் தந்தைதான். அவரை புக் செய்ததும், ஒத்திகைக்கு நாள் குறித்தார்.

நாகேஷ் இயல்பாகவே நல்ல டான்சர், ஆனாலும் பாடல் நன்றாக வரவேண்டும் என்ற நோக்கத்தில், பல நாட்கள் வந்து ரிகர்சல் செய்தார். உடன் ஆடுவதற்கு எந்த நடிகையை தேர்வு செய்யலாம் என்று யோசித்தபோது, நாகேஷ் சொன்னார் நடிகைகள் வேண்டாம், ஏன்னா அவர்கள் நல்லா நடிப்பார்கள். ஆனால் நல்லா டான்ஸ் பண்ணணுமே, அப்போதுதான் பாடல் காட்சிக்கு நல்லா இருக்கும். அதனால் சொல்லிக் கொடுத்த, ரிகர்சல் பண்ணின, டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் உதவியாளர் சாந்தாவை டான்ஸ் பண்ண வைக்கலாம். என் மூடுக்கு ஏற்ற மாதிரி பண்ணுவாங்க என்றார். நாங்களும் ரெகார்டிங் எப்படி நடக்கிறது என்பதை ஆடியன்சுக்கு காட்ட தியேட்டர் செட்டே புதிதாக போட்டு படம் பிடித்தோம். இப்படி நாகேஷ் பாத்திரத்தை உணர்ந்து ஈடுபாட்டுடன்முழு ஒத்துழைப்பு தந்ததால், அவளுக்கென்ன அழகிய முகம் பாடல் காட்சி மிகச் சிறப்பாக வந்தது. இதன் பிறகு, ஒரு நாள் கடற்கரையில் நான் வாக்கிங் போய்க் கொண்டிருந்தேன். அப்போது டி.எம்.சவுந்திரராஜனை சந்தித்தேன் என்னை பார்த்ததும் சொன்னார். ‘ஜெய்ச்சிடீங்களே அய்யா!, சர்வர் சுந்தரத்துல நான் பாடிய பாடல் எடுபடாது, தியேட்டர்ல ஆள் இருக்காது என்றேன். ஆனா, அந்த பாட்ட பார்க்கவே ஜனங்க வர்றாங்கன்னு கேள்விப்பட்டேன். ரொம்ப மகிழ்ச்சி அய்யா’ என்று வாழ்த்திவிட்டு சென்றார்.

நம்பிக்கை இழந்து பேசியவரையும், வியக்க வைத்த பெருமை, நாகேசை சேரும்.

இந்தப்படம் சென்னையில், கிரவுன், ராக்சி, வெலிங்டன், கிருஷ்ணா, எல்லா தியேட்டர்களிலும் நூறு நாட்கள் ஓடியது. இதன் வெற்றியை கொண்டாட நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒரே வேனில் புறப்பட்டு எல்லா தியேட்டர்களுக்கும் ரசிகர்களை சந்திக்க புறப்பட்டோம். கிருஷ்ணா தியேட்டரின் இடைவேளையில் நாகேஷ் பேசினார். எல்லோருக்கும் வணக்கம். இயக்குனர் பேசும்போது இந்த படத்தின் வெற்றிக்கு நாகேஷ் தான் காரணம் என்றார். நான் அதை ஒத்துக்கொள்ளமாட்டேன், என்று கூறிவிட்டு, நாகேஷ் ரசிகர்கள் மத்தியிலிருந்து, ஒரு பையனை சுட்டிக்காட்டி, தம்பி இங்க வாங்க என்று அவனை மேடைக்கு அழைத்தார். அவன் மேடைக்கு வந்ததும், தம்பி நீங்க இந்த சர்வர் சுந்தரம் படத்தை எத்தனையாவது முறையா பார்க்க வந்திருக்கீங்க என்றார். அவன் நாலாவதுமுறையா பார்க்கிறேன் என்றான். உடனே நாகேஷ் கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவரிடம் தம்பி நீங்க? என்றார். அவன் ஐந்தாவது முறை என்றான். உடனே நாகேஷ், பார்த்தீங்களா ஒவ்வொருத்தரும் ஒருமுறைக்கு மேல் பலமுறை இந்த படத்தை பார்த்திருக்கீங்க. இப்போ புரியுதா இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்துருக்குன்னா அதுக்கு காரணம் ரசிகர்களாகிய நீங்கள்தான் என்று சொன்னார். அப்படி ஒரு புத்திகூர்மையான சிறந்த மனிதர், திறமையான நடிகர் நாகேஷ்.

இதனை அவரிடம் எங்கள் தயாரிப்பில் உருவான ஒவ்வொரு படங்களிலும் நாங்கள் பார்த்தோம்.

ஏ.வி.எம்.குமரன், 
நிர்வாக இயக்குனர், 
ஏ.வி.எம் நிறுவனம்.

Next Story