சீதோஷ்ண நிலை மாற்றத்தால் சளி, இருமலால் பாதிப்பு அதிகரிப்பு
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் சளி, இருமலால் பாதிக்கப்பட்டோர் அதிகரித்துள்ளனர். இவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்றனர்.
சிகிச்சைக்காக குவிந்த மக்கள்
கடலூரில் அரசு தலைமை ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு பொது மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு முறிவு, மகப்பேறு, குழந்தைகள் பிரிவு, எக்ஸ்ரே, ஸ்கேன் பிரிவு, அவசர சிகிச்சை, அதி தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதனால் இங்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
குறிப்பாக திங்கட்கிழமை தோறும் அனைத்து டாக்டர்களையும் சந்தித்து சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற முடியும் என்பதால், அன்று மட்டும் வழக்கத்தை விட அதிகமான நோயாளிகள் வருவார்கள். அதன்படி நேற்று சளி, காய்ச்சல், இருமல், சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, கண், காது, மூக்கு, தொண்டை பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு என பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை பெறுவதற்காக ஒரே நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
நீண்ட நேரம் காத்திருந்தனர்
ஆனால் புறநோயாளிகள் சீட்டு வழங்கும் இடத்தில் இணைய தள சேவை மெதுவாக இருந்தது. இதனால் அங்கிருந்த ஊழியர்களால் உடனடியாக புறநோயாளிகள் சீட்டு வழங்க முடியவில்லை. இதன் காரணமாக புற நோயாளிகள் சீட்டு வழங்கும் இடத்தில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். பிறகு கையால் எழுதி புற நோயாளிகள் சீட்டு வழங்கினர். இதை பெற்ற பொதுமக்கள் தங்கள் நோய்க்கான டாக்டர்களை சந்தித்து சிகிச்சை பெற்றனர். சீதோஷ்ண நிலை மாற்றத்தால் சளி, இருமலால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களும் சிகிச்சை பெற வந்திருந்தனர்.
1690 நோயாளிகளுக்கு சிகிச்சை
இது பற்றி ஆஸ்பத்திரி நிலைய மருத்துவ அலுவலர் அசோக்பாஸ்கரிடம் கேட்ட போது, வழக்கமாக திங்கட்கிழமைகளில் 1600 நோயாளிகள் வரை வருவது உண்டு. அதன்படி தான் இன்றும் (நேற்று) 1690 நோயாளிகள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வந்துள்ளனர். இதில் காய்ச்சலுக்கு மட்டும் 8 குழந்தைகள் உள்பட 16 பேர் தான் வந்துள்ளார்கள்.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மட்டும் 350 பேர் வந்தனர். மற்ற நோய்களுக்கும் சிகிச்சைக்காக வந்தனர். காலையில் மழை பெய்ததால் அனைவரும் ஒரே நேரத்தில் வந்து விட்டனர். மேலும் புற நோயாளிகள் நுழைவு சீட்டு வழங்கும் இடத்தில் இணைய தள சேவை பிரச்சினையால்சீட்டு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு கையால் எழுதி டாக்டர்களிடம் சிகிச்சை பெற ஏற்பாடு செய்தோம். மற்றபடி இப்போது சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்றார்.