சாட்சி சொன்ன சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்
திருப்பத்தூர் கோர்ட்டில் சாட்சி சொன்ன சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
அடிதடி வழக்கு
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 38). இவர் அதே பகுதியில் அரிசி கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார்.
கடந்த 2014-ம் ஆண்டு வினோத்குமார் ஆலங்காயம் பகுதியில் அடிதடி தகராறில் ஈடுபட்டது சம்பந்தமாக ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கு திருப்பத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
கொலை மிரட்டல்
இந்த வழக்கு விசாரணையில் வினோத்குமார் ஆஜரானார். அப்போது ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஜெகநாதன் இந்த வழக்கில் சாட்சி சொன்னார்.
பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த சப்-இன்ஸ்பெக்டரை பார்த்து, வினோத்குமார் என்னுடைய வழக்குக்கு நீ சாட்சி சொல்ல வருகிறாயா?. உன்னை இங்கேயே தீர்த்து கட்டி விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
பா.ஜ.க. நிர்வாகி கைது
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.
கைது செய்யப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி வினோத்குமார் மீது ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் 7 வழக்குகள் உள்ளது. அவரது பெயர் ரவுடி பட்டியலில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.