கருங்கல்பாளையம் சிந்தன் நகரில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு; அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


கருங்கல்பாளையம் சிந்தன் நகரில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு; அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 May 2022 9:12 PM GMT (Updated: 28 May 2022 1:53 AM GMT)

கருங்கல்பாளையம் சிந்தன் நகரில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

ஈரோடு

கருங்கல்பாளையம் சிந்தன் நகரில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுத்திகரிப்பு நிலையம்

ஈரோடு கருங்கல்பாளையம் சிந்தன் நகர், மாதவகாடு, வைராபாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இதில் சிந்தன் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதியின் நடுவில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் மனுவும் கொடுத்துள்ளனர்.

அதிகாரிகள் முற்றுகை

இந்தநிலையில் நேற்று காலை மாநகராட்சி சார்பில் அந்த பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்றனர். மேலும் இந்த பணிக்காக குழி தோண்டுவதற்காக பொக்லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டு இருந்தது.

இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அங்கு ஒன்று திரண்டனர். அவர்கள் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நோய் பரவ வாய்ப்பு

இதைத்தொடர்ந்து மாநகராட்சி உதவி ஆணையாளர் விஜயகுமார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

சிந்தன் நகர் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் சுகாதார சீர்கேடு ஏற்படும். மேலும் அந்த வழியாக பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு டெங்கு, காலரா, பன்றி காய்ச்சல், சிக்கன் குனியா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது.

பணிகள் நிறுத்தம்

மேலும் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசக்கூடும் என்பதால் சுகாதார சீர்கேடு, காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடும் ஏற்படும். நிலத்தடி நீரும் பாதிக்கப்படும். இதன் காரணமாக நாங்கள் வேறு இடத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கூடாது. காலிங்கராயன் வாய்க்காலை ஒட்டியோ அல்லது காவிரி ஆற்றங்கரையிலோ சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி உதவி ஆணையாளர் கூறும்போது, 'இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து வேறு இடத்தில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். மேலும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியும் நிறுத்தப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.


Next Story