சரக்கு ஆட்டோ மோதி வாலிபர் பலி: உடலை எரியூட்ட எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு


சரக்கு ஆட்டோ மோதி வாலிபர் பலி: உடலை எரியூட்ட எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
x

சரக்கு ஆட்டோ மோதி வாலிபர் பலியானார். அவரது உடலை எரியூட்ட ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள அக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் நீலக்கண்ணன் (வயது 31). இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வேலை முடிந்து தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் ெசன்று கொண்டிருந்தார். மணிகண்டம் அருகே அளுந்தூர் அரசு ஐ.டி.ஐ. அருகே சாலையோரமாக சென்றபோது திருச்சியில் இருந்து பொன்னமராவதியை நோக்கி சென்ற சரக்கு ஆட்டோ திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நீலக்கண்ணன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த நீலகண்ணன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் திருச்சி அரசு மருத்துவமனை வாகனம் மூலம் அக்கல்நாயக்கன்பட்டிக்கு நேற்று மதியம் 2 மணியளவில் எடுத்துவரப்பட்டது. முன்னதாக அவரது உறவினர்கள் அக்கல்நாயக்கன்பட்டி அருகே உள்ள ஒரு இடத்தில் எரியூட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அங்கு ஏற்கனவே சுடுகாட்டு பிரச்சினை நிலவி வருவதால் ஒரு தரப்பினர் இறந்தவரின் உடலை இங்கு எரியூட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, விராலிமலை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து நீலக்கண்ணனின் உறவினர்கள் பிரேத வாகனத்தின் முன்பு சாலையில் அமர்ந்து கொண்டு இந்த இடத்தில் தான் உடலை எரியூட்ட வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விராலிமலை தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இறந்த நீலக்கண்ணனின் உறவினர்கள் ஏற்பாடு செய்த இடத்திலேயே 3 மணி நேரத்திற்கு பிறகு உடல் எரியூட்டப்பட்டது.


Next Story