கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை எதிரொலியாக, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள்
சர்வதேச சுற்றுலா தலமான 'மலைகளின் இளவரசி' கொடைக்கானலுக்கு வாரவிடுமுறை மற்றும் சுதந்திர தின விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் கூட்டம் நேற்று அலைமோதியது. அதிகாலை முதலே கொடைக்கானலுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்ததால் கடும் ேபாக்குவரத்து ெநரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக பெருமாள்மலை-கொடைக்கானல் இடையே சுமார் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். நகர் பகுதியில் போதிய போக்குவரத்து போலீசார் இல்லாததால், நகராட்சி ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
படகு சவாரி
இதற்கிடையே கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, ரோஜாபூங்கா, தூண்பாறை, குணாகுகை, பைன்மரக்காடு, மோயர்பாய்ண்ட் உள்ளிட்ட இடங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.
ஏரிச்சாலையில் குதிரை சவாரி செய்தும், சைக்கிள் ஓட்டியும் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று காலையில் மிதமான வெயிலும், மாலையில் குளிரும் நிலவியதால் குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் ஆனந்தமுடன் அனுபவித்தனர்.
தற்போது கொடைக்கானல் சலேத் மாத ஆலய திருவிழா நடைெபறுவதால் அங்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ெசன்று திருவிழாவை கண்டுகளித்தனர்.