தனியார் வங்கி ஊழியர், வாலிபர் தற்கொலை
வெவ்வேறு சம்பவத்தில் தனியார் வங்கி ஊழியர், வாலிபர் ஆகியோர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தனியார் வங்கி ஊழியர் தற்கொலை
கரூர் வெண்ணைமலை பசுபதிபாளையம் பகுதிக்குட்பட்ட ராம் நகரை சேர்ந்தவர் பூபதி (வயது 38). இவர் தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் புதிதாக வீடு கட்டுவதற்கு கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பூபதி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து பூபதியின் மனைவி சரண்யா (28) கொடுத்த புகாரின்பேரில், வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகமாணிக்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பூபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் சாவு
வெள்ளியணை அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல் (35). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் ஜவுளி ஆயத்த ஆடை நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்தபோது, அதே நிறுவனத்தில் வேலை பார்த்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராமலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர் தற்போது வெள்ளியணை பகுதி திருமுடிகவுண்டனூரில் வசித்து வந்தனர்.இந்த நிலையில் கர்ப்பிணியாக இருந்த ராமலட்சுமிக்கு குறைபிரசவத்தில் குழந்தை பிறந்து இறந்து விட்டது. இதனால் தங்கவேல் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனைவி ராமலட்சுமி தனது அம்மா வீடான தூத்துக்குடிக்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் தாழ்வாரத்தில் தூக்குபோட்டு கொண்டார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.