ஊட்டி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பழுதான சாலையால் நோயாளிகள் அவதி-உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ஊட்டி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சாலை வசதி சரியாக இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள்.
ஊட்டி
ஊட்டி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சாலை வசதி சரியாக இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள்.
ஊட்டி அரசு ஆஸ்பத்திரி
நீலகிரி மாவட்டம் ஊட்டி மேல் பஜார் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி 1867-ம் ஆண்டு ஆங்கிலேயர் அரசால் போரில் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தோற்றுவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் முதல் முதலில் இந்த மருத்துவமனை தான் தொடங்கப்பட்டது. இதன் பின்னர் 1926-ம் ஆண்டு அரசு வசம் ஆனது. சமீபத்தில் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் 150-வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இங்கு பொதுமருத்துவம், டயாலிசிஸ், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, காது, மூக்கு மற்றும் தொண்டை, மனநல மருத்துவப் பிரிவு, கண் சிகிச்சைப் பிரிவு, ரத்தப் பரிசோதனைப் பிரிவு, எம்.ஆர்.ஐ, சி.டி ஸ்கேனிங் உட்பட பல பிரிவுகளில் பொதுமக்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றன. அதேபோல, மாவட்டத்தில் 5 தாலுகா அரசு தலைமை மருத்துவமனைகளும், 2 மருந்தகங்களும் செயல்பட்டு வருகின்றன.
ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகளாக ஒரு நாளைக்கு 450 பெரும் உள்நோயாளிகளாக 300 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வளவு பாரம்பரியமும் அத்தியாவசிய தேவையும் வாய்ந்த ஊட்டி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சாலைகள் குண்டும், குழியுமாக கற்களுடன் காணப்படுகின்றன. மேலும் பல்வேறு அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
எலும்பு முறிவு பாதிப்பு அதிகரிப்பு
எள்ளநல்லி ரவி: அரசு ஆஸ்பத்திரியில் சமீபத்தில் எனது உறவினரை சிகிச்சைக்காக சேர்த்து இருந்தோம். அப்போது சிகிச்சை பெரும் அறையில் இருந்து எக்ஸ்ரே, ஸ்கேன் எடுப்பது உள்ளிட்ட தேவைகளுக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு சொந்தமான ஸ்ட்ரக்சர் மற்றும் சக்கர நாற்காலியில் நோயாளியை கூட்டி செல்கின்றனர். ஆனால் அவ்வாறு ஸ்ட்ரக்சர் மற்றும் நாற்காலியில் கொண்டு செல்லும்போது சாலை குண்டும் குழியுமாக கற்கள் நிறைந்து கரடு முரடாக காணப்படுவதால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக வாகன விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் அங்கிருந்து எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்க ஸ்ட்ரக்சர் அல்லது சக்கர நாற்காலியில் கீழ்தளத்திற்கு வருகின்றனர். ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் அவதிப்படும் அவர்கள் இந்த குண்டும் குழியுமான சாலை வழியாக வரும்போது கூடுதல் வலியால் அவதிப்படுகின்றனர். மேலும் எலும்பு முறிவு பாதிப்பு அதிகமாகிறது. ஊட்டியின் மையப்பகுதியில் உள்ள ஏழைகள் புகலிடம் வாய்ந்த இந்த அரசு ஆஸ்பத்திரியில் சாலை வசதிகளை சரி செய்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
சதீஷ், தங்காடு:- தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் சாலை மோசமாக இருக்கும். எனவே அந்த இடத்தில் வரும்போது நோயாளிகளை கவனமுடன் அழைத்துச் செல்வார்கள். ஆனால் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் முழுவதும் சாலை படுமோசமாக காட்சி அளிக்கிறது. இதனால் நோயாளிகளை ஸ்ட்ரக்சர் மற்றும் சர்க்கரை நாற்காலியில் அழைத்து செல்லும்போது நோயாளிகள் வலியால் அவதிப்படுவதால் அவரது உறவினர்கள் ஸ்ட்ரக்சரை இழுத்துச் செல்லும் பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படுகிறது. மேலும் அரசு ஆஸ்பத்திரி சுற்றுச்சுவர் உடைந்து கிடப்பதால் கால்நடைகள் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சுற்றி திரிகின்றன. எனவே அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரூ.5 கோடி ஒதுக்கீடு
இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் மனோகரி கூறியதாவது:- ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரமாக மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பொதுப்பணி துறை மூலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கால்வாய்கள் சரி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு மகப்பேறு கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் உணவு சமைக்கும் அறையையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் 6 மாதத்திற்குள் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடம் முழுமையாக தயாராகிவிடும் என்பதால் ஒருவேளை அரசு ஆஸ்பத்திரி அங்கு மாற்றப்படலாம். மேலும் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் தேவைப்படும் வசதிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
.