வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு இரண்டாண்டு ஆகியும் சீரமைக்கப்படாத பாலம்


வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு இரண்டாண்டு ஆகியும் சீரமைக்கப்படாத பாலம்
x

பரங்கிப்பேட்டை அருகே வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு இரண்டாண்டு ஆகியும் இதுவரை பாலம் சீரமைக்கப்படவில்லை. இதனால் பஸ் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டதால் 20 கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கடலூர்

பரங்கிப்பேட்டை,

சிறுபாலம்

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே சாமியார்பேட்டை-மடவப்பள்ளம் சாலையில் பெரியப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட குமாரபேட்டை சாலையின் குறுக்கே ஓடை செல்கிறது. போக்குவரத்து வசதிக்காக அந்த ஓடையின் குறுக்கே சிறுபாலம் அமைக்கப்பட்டிருந்தது.

இவ்வழியாக தினசரி பஸ், லாரி, கார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சாமியார்பேட்டை, பெரியகுப்பம், சின்னூர் புதுப்பேட்டை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக எளிதில் சிதம்பரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவர இந்த சாலையை தான் பயன்படுத்தி வந்தனர்.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவமழையின் போது, அந்த ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதில் அந்த சிறுபாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அவ்வழியாக வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் அதன் அருகில் அமைக்கப்பட்ட தற்காலிக மாற்று பாதையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் மட்டுமே சென்று வருகின்றனர். குறுகிய பாதையாக இருப்பதால் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியவில்லை.

நடவடிக்கை

இதனால் அப்பகுதிகளுக்கு கடந்த இரண்டாண்டுகளாக பஸ் போக்குவரத்து இல்லாததால், குமாரப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள், பஸ்சுக்கு செல்ல வேண்டுமானால், நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மேலும் மழைக்காலங்களில் அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி குட்டை போல் மாறி விடுவதால், அந்த மாற்று வழியையும் பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது. எனவே 20 மீனவ கிராம மக்களின் நலன்கருதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் குமாரபேட்டையில் போர்க்கால அடிப்படையில் சிறுபாலம் கட்டிக் கொடுக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஸ் போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து பெரியப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன் கூறுகையில், வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டதால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க குமாரபேட்டையில் விரைந்து பாலம் அமைக்க வேண்டும் என்றார்.

வீண்செலவு

குமாரபேட்டை கிராம தலைவர் பாலு கூறுகையில், பாலம் உடைந்து 2 ஆண்டுகள் ஆகியும் புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எங்கள் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் பிடித்து வரும் மீன்களை லாரிகளில் ஏற்றி விற்பனைக்காக வெளியூர்களுக்கு அனுப்புவதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. லாரிகளில் நீண்ட தூரம் சுற்றி செல்வதால் வீண் செலவு ஏற்படுகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர்க்க புதிய பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story