ஆட்டோ டிரைவர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடிய மாநகராட்சி மேயர்
உயர் பதவிக்கு வந்தாலும், பழையதை மறக்காமல் கும்பகோணத்தில் ஆட்டோ டிரைவர்களுடன் மாநகராட்சி மேயர் சரவணன் ஆயுதபூஜை கொண்டாடினார்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பெரியகடை வீதி பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ டிரைவராக இருந்தவர் சரவணன் (வயது 42). இவர் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் 17-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் சரவணன் மாநகராட்சி மேயரானார். ஒரு ஆட்டோ டிரைவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டது, அனைவராலும் வியந்து பார்க்கப்பட்டது.
ஆயுதபூஜை
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆயுதபூஜையையொட்டி, சரவணன் பழையதை மறக்காமல் சக ஆட்டோ டிரைவர்களுடன் ஆயுதபூஜையை கொண்டாட விரும்பினார். இதற்காக அவர் தனது ஆட்டோவை சுத்தம் செய்து அலங்கரித்து அந்த ஆட்டோவிலேயே பெரிய கடைவீதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்திற்கு வந்தார். பின்னர் அவர் சக ஆட்டோ டிரைவர்களுடன் ஆயுத பூஜையை கொண்டாடினார். என்னதான் உயர் பதவிக்கு வந்தாலும், பழையதை மறக்காமல் ஆட்டோ டிரைவர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடிய சரவணனை அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டினர்.