சிகிச்சை பலனின்றி வாலிபர் சாவு


சிகிச்சை பலனின்றி வாலிபர் சாவு
x

திருவாரூர் அருகே விருந்து சாப்பிட்டதால் வாந்தி-மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த வாலிபர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து பிரியாணி வாங்கப்பட்ட ஓட்டலில் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருவாரூர்


திருவாரூர் அருகே விருந்து சாப்பிட்டதால் வாந்தி-மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த வாலிபர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து பிரியாணி வாங்கப்பட்ட ஓட்டலில் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

விருந்து

திருவாரூர் அருகே உள்ள திருவாசல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் விக்னேஷ். இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 26). இவர் 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் இவருக்கு 5-ம் மாதத்தையொட்டி மருந்து கொடுக்கும் நிகழ்ச்சி விக்னேஷ் வீட்டில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில் 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் அவர்களுக்கு விருந்து வைக்கப்பட்டது. இதில் 5 வகை சாதம் மற்றும் பிரியாணி பரிமாறப்பட்டது.

வாந்தி-மயக்கம்

விருந்தில் உணவருந்திய சிறிது நேரத்தில் 20 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களை சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் 12 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். திருவாரூர் அருகே வேலங்குடியைச் சேர்ந்த செல்வமுருகன் (24),சந்துரு (10), இளரா (62), செல்வகணபதி (25) பாலாஜி (22), யஷ்வந்த் (4) ஆகியோர் சிகிச்சை பெற்று வந்தனர்.

கர்ப்பிணி மாரியம்மாள் திருவாரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தந்தை ராஜமாணிக்கம் (60) அடியக்கமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

சிகிச்சை பலனின்றி வாலிபர் சாவு

இந்நிலையில் செல்வமுருகன் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இந்த நிகழ்வில் பரிமாறப்பட்ட 5 வகை சாதங்கள் மாரியம்மாள் தாய் வீட்டிலில் இருந்து தயார் செய்து எடுத்து வரப்பட்டதும், விக்னேஷ் வீட்டின் தரப்பில் பரிமாறப்பட்ட சிக்கன் பிரியாணி திருவாரூரில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வாங்கப்பட்டதும் தெரியவந்தது.

ஓட்டலில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

இந்த பாதிப்பு குறித்து மருத்துவத்துறையின் முதற்கட்ட அறிக்கையில் உணவு ஒவ்வாமையால் தான் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருந்தில் சாப்பிட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவு ஒவ்வாமையானதற்கான காரணம் குறித்து பிரியாணி வாங்கப்பட்ட ஓட்டலுக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story