வேளாண் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு
உளுந்தூர்பேட்டை அருகே வேளாண் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூரில் ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை முதல் விவசாயிகளுக்கு விதை உளுந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில் விதை உளுந்துக்கு கிலோவுக்கு அரசு நிர்ணயம் செய்த விலையை தாண்டி, ரூ. 90 வரைக்கும் விற்பனை செய்துள்ளனர். இதானல் முறைகேடுகள் நடந்து வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாலை 5 மணிக்கு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு பால்சுதர் தலைமையில் இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் மற்றும் போலீசார் அலுவலகத்துக்கு நேற்று மாலை அதிரடியாக நுழைந்து திடீர் சோதனை நடத்தி, அங்கிருந்த அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் 9 லட்சம் ரூபாய் ரொக்கம் கைற்றப்பட்டது. இதில் கணக்கில் வராத பணம் எவ்வளவு என்பது குறித்து வேளாண் அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.