கடலூரில் பரபரப்பு கூட்டுறவு பெண் ஊழியரிடம் நகை பறிப்பு போலீசார் விசாரணை
கடலூரில் கூட்டுறவு பெண் ஊழியரிடம் மர்மநபர்கள் நகையை பறித்துச் சென்றது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நகை பறிப்பு
கடலூர் சாவடி பகுதியை சேர்ந்தவர் 50 வயதுடைய பெண். இவர் கடலூரில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 7.15 மணி அளவில் அவர் வேலை முடிந்ததும் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த நகையை பறித்தனர்.
இதில் பதறிய அவர் திருடன் திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் 2 பேரும், அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அதன் அடிப்படையில் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதுடன், அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். எந்நேரமும் ஆட்கள் நடமாட்டமுள்ள பகுதியில் கூட்டுறவு வங்கி பெண் ஊழியரிடம், மர்மநபர்கள் நகையை பறித்துச் சென்ற சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.