அரசு வேளாண்மை கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
Student commits suicide in Government Agriculture College hostel
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே, அரசு வேளாண்மை கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு காரணம் என்ன? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
முதலாமாண்டு மாணவர்
ஈரோடு மாவட்டம் கோட்டைக்காடு விஜயமங்கலத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் நவீன்ராஜ் (வயது 19).
இவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வல்லநாட்டில் உள்ள கிள்ளிகுளம் அரசு வேளாண்மை கல்லூரியில் பி.எஸ்சி. முதலாமாண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்து வகுப்புக்கு சென்று வந்தார்.
மனவேதனை
இந்தநிலையில் நவீன்ராஜ் தீபாவளி விடுமுறையில் தனது சொந்த ஊரான ஈரோட்டுக்கு சென்றார். அங்கிருந்து கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தான் கல்லூரிக்கு வந்தார்.
நவீன்ராஜ் ஊருக்கு சென்றிருந்தபோது வீட்டில் உள்ளவர்களிடம், தனக்கு படிக்க விருப்பம் இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. வீீட்டில் உள்ளவர்கள் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் கல்லூரிக்கு செல்ல அறிவுறுத்தினர். இதனால் கல்லூரிக்கு வந்த நவீன்ராஜ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
நேற்று மதியம் கல்லூரி விடுதி அறையில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு நவீன்ராஜ் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ஜமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
கல்லூரி மாணவர் நவீன்ராஜ் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மாணவர் நவீன்ராஜ் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.