செல்போனில் விளையாடி மாணவர்கள் நண்பர்களுடன் இருக்கும் மகிழ்ச்சியை இழந்து விடக்கூடாது: கனிமொழி எம்.பி.
Playing on cell phones Students should not lose the joy of being with friends: Kanimozhi MP
மாணவர்கள் செல்போனில் விளையாடிவிட்டு, நண்பர்களுடன் இருக்கும் மகிழ்ச்சியை இழந்துவிடக்கூடாது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
கபடி போட்டி
தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு போலீசாருக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையிலான கபடிபோட்டி நடந்தது. போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு கபடிபோட்டியை தொடங்கி வைத்து பேசினார்.
மகிழ்ச்சி
அப்போது, விளையாட்டு என்பது நமது வாழ்க்கையில் மிகமுக்கியமான ஒன்று. விளையாட்டு என்றால் செல்போனில் விளையாடக்கூடிய விளையாட்டு கிடையாது. வீட்டை விட்டு வெளியே வந்து விளையாடக்கூடிய விளையாட்டு ஆகும். இது உங்களை ஆரோக்கியமாக வைக்கக்கூடியது. மாணவர்கள் நண்பர்களுடன் விளையாடக்கூடிய மகிழ்ச்சியை இழந்துவிடக் கூடாது. ஒவ்வொருவருக்கும் தங்களது வாழ்க்கையில் அடையக் கூடிய லட்சியம், கனவு இருக்கும். நமது முன்னாள் குடியரசுதலைவர் அப்துல் கலாமுக்கு சிறு வயதில் ராணுவ விமானங்களை இயக்கும் பைலட்டாக வேண்டும் என்பது கனவு. ஆனால் அதை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் தொடர்ந்து படித்து அவர் அறிவியல் விஞ்ஞானியாக பணியாற்றினார். பின்னர் எந்த ராணுவவிமானங்களை இயக்க வேண்டும் என்று கனவு கண்டாரோ அந்த படைகளுக்கே தலைவராக வந்தார். அப்போது அவர் ராணுவ விமானங்களை இயக்க கற்றுக்கொண்டு இயக்கி தனது கனவை நிறைவேற்றினார். எனவே கனவு காண்பதற்கும், அதை அடைவதற்கும் வயது கிடையாது. எனவே உங்கள் கனவை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதீர்கள். நீங்கள் செய்யக்கூடிய செயல்களை மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும் என்று கூறினார்.
அமைச்சர் கீதாஜீவன்
விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசும் போது, முதல்-அமைச்சர் குழந்தைகள் நேய தமிழகமாக இருக்க வேண்டும் என்றுஅனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார். சமூகபாதுகாப்பு துறையும், போலீஸ் துறை மற்றும் சைல்டுலைனுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் சைல்டுலைன் திட்ட இயக்குநர் மன்னர் மன்னன், மாவட்ட சமூகநல அலுவலர் ரதிதேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் சங்கரேசுவரி, தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆரோக்கியபீட்டர் மற்றும் போலீசார், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஆய்வு
முன்னதாக தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில், அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு விருதுகள், சங்கப் பணியாளர்களுக்கு பரிசுகள், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். மாலையில் தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.53.4 கோடியில் அமைக்கப்பட்டு வரும் பஸ் நிலைய பணிகளை கனிமொழி எம்.பி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ, செயற்பொறியாளர் அசோகன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.