துணை கலெக்டர் உடலுக்கு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி
Officers including the Collector paid tribute to the Deputy Collector
திருப்பத்தூர் துணை கலெக்டரும் கலெக்டரின் நேர்முக உதவியாளருமான பி.மோகனகுமரன் நேற்று முன்தினம் திருப்பத்தூர் பிரான் லைன் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் அவரது உடலை மனைவி சாந்தியிடம் ஒப்படைத்தனர். அங்கு அவரது மனைவி, 12 வயது மகன் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். மருத்துவமனை வளாகத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா, மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கோட்டாட்சியர் லட்சுமி உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர. பின்னர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் அவரது உடலை சொந்த ஊரான சேலம் மாவட்டம் கடமைப்பட்டிக்கு கொண்டு சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள்.
துணை கலெக்டர் மோகனகுமரன் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் கூறுகையில், மோகனகுமரன் இருதயம் வீங்கி இருந்ததாகவும் மாரடைப்பு காரணமாக உயிர் பிரிந்து இருக்கலாம். ஆனால் முழு பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் எவ்வாறு அவர் இறந்தார் என்பது தெரியவரும் என்று கூறினார்கள்.