ஊட்டி போலீஸ் நிலையத்தை டிரைவர்கள் முற்றுகை
ஆட்டோ டிரைவரை தாக்கிய வாலிபரை கைது செய்ய கோரி ஊட்டி போலீஸ் நிலையத்தை டிரைவர்கள் முற்றுகையிட்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் சுலைமான் (வயது 55). ஆட்டோ டிரைவர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் எல்க்ஹில் பகுதிக்கு சவாரிக்கு சென்று உள்ளார். அப்போது ஊட்டியை சேர்ந்த அஜய் (27) என்பவர், சுலைமானின் ஆட்டோவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு, சுலைமானை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சுலைமானுக்கு படுகாயம் ஏற்பட்டு உள்ளது. அப்போது அஜய் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.
பின்னர் அக்கம்பக்கத்தினர் சுலைமானை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதேபோல் அஜய்யும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று சுலைமானை தாக்கியவரை கைது செய்ய கோரி ஊட்டி ஆட்டோ டிரைவர்கள் ஏராளமானோர் ஆட்டோக்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி குமார் உறுதி அளித்ததால், டிரைவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் சிகிச்சை பெற்று வரும் சுலைமான், அஜய் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், அஜய் தாக்கியது தெரியவந்தது. இதுதொடர்பாக கொலை மிரட்டல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் அஜய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.