சிதம்பரம், விருத்தாசலம் பகுதி வயல்களில் தேங்கிய மழைநீர் வடியாததால் விவசாயிகள் கவலை
Chidambaram, Vriddhachalam area Farmers are worried because the rainwater that has accumulated in the fields does not drain
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சிதம்பரம் அருகே நடராஜபுரம் கனகரபட்டு, பின்னத்தூர், பெரியகாரமேடு, சின்னகாரமேடு, கீழப்பெரம்பை, வீரன் கோவில் திட்டு ஆகிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் நடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. ஏற்கனவே இப்பகுதியில் மேட்டூரில் இருந்து கொள்ளிடத்தில் திறக்கப்பட்ட உபரி நீர் கடலுக்கு செல்லாமல் எதிர்த்து வந்ததால் இப்பகுதியில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அதிகாலையிலும் சிதம்பரம் பகுதியில் மழை பெய்ததால் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. விவசாய நிலங்கள் அனைத்தும் குளம் போல் காட்சியளிக்கின்றது. இதனால் சம்பா பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். வேதனையில் உள்ளனர். எனவே இப்பகுதியில் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண் அதிகாரிகள் கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலம்
விருத்தாசலம் பகுதியில் பெய்த மழையால் பெரம்பலூர் கிராமத்தில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அங்கு நடவு செய்த நெற்பயிர்கள் வளர்ச்சி பருவத்தை எட்டுவதற்குள் மூழ்கி அழுகி போய் உள்ளன. வேர்கள் அழுகிவிட்டதால் இனிமேல் நெற்பயிர்கள் பிழைக்காது என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.