சுரண்டை அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
சுரண்டை அருகே அங்கன்வாடி மையம் முன் வாறுகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுரண்டை:
சுரண்டை அருகே குலையநேரி கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. அதன் முன்பு வாறுகால் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டு உள்ளது. சில தனிநபர்கள் எதிர்ப்பின் காரணமாக வாறுகால் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த இடத்தில் குழி இருப்பதே தெரியாத அளவிற்கு புற்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள் அந்த குழிக்குள் விழும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. மேலும் அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் புதர்கள் மண்டி காணப்படுகின்றன. இதனால் அங்கு பாம்புகள் நடமாட்டமும் உள்ளது. மேலும் 25 குழந்தைகள் படித்து வரும் அந்த அங்கன்வாடியில் ஒரு உதவியாளர் மட்டுமே பணியில் உள்ளார். இதனால் அவரே சமையல் செய்து விட்டு குழந்தைகளை கவனிக்க வேண்டிய நிலை இருப்பதால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து கிராம சபை கூட்டத்தில் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அங்கன்வாடி மையம் முன் வாறுகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி குலையநேரி கிராம மக்கள் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி, கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி, வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம், உதவியாளர் பரமசிவன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.