மோதிரமலை கும்பையாற்றில் பாலம் அமைக்க சப்-கலெக்டர் ஆய்வு


மோதிரமலை கும்பையாற்றில் பாலம் அமைக்க சப்-கலெக்டர் ஆய்வு
x

Sub-collector survey for construction of bridge over Mothiramalai Kumbayayar

கன்னியாகுமரி

குலசேகரம்,

பேச்சிப்பாறை அருகே மோதிரமலை கோலிஞ்சிமடத்தில் வாகன போக்குவரத்து வசதி இல்லாததால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் நோயாளி இறந்ததையடுத்து, அந்த பகுதியை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது, கும்பையாற்றில் பாலம் அமைப்பது தொடர்பாக திட்ட மதிப்பீடு தயாரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

நோயாளி சாவு

பேச்சிப்பாறை அருகே உள்ள மோதிரமலை கோலிஞ்சிமடம் பழங்குடி குடியிருப்பைச் சேர்ந்தவர் வேலு (வயது 67). இவருக்கு கடந்த 12-ந் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், அந்த பகுதியில் ேபாதிய சாலை மற்றும் வாகன போக்குவரத்து வசதி இல்லாததால் வேலுவின் மகன் விக்னேஷ் உள்பட அக்கம் பக்கத்தினர் அவரை தோளில் சுமந்தவாறு சுமார் 3 கி.மீ. தூரம் நடந்து சென்றனர். அங்குள்ள கும்பையாற்றை கடந்து சாலைப்பகுதிக்கு வந்து வாகனம் மூலம் பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே வேலு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து 'உரிய சாலை வசதி இருந்திருந்தால் தனது தந்தையைக் காப்பாற்றியிருக்க முடியும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நிகழாமல் இருக்க சாலை வசதி வேண்டும்' என்று வேலுவின் மகன் விக்னேஷ் தெரிவித்தார்.

அதிகாரிகள் ஆய்வு

இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிவுறுத்தலின்படி நேற்று பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் மோதிரமலை கோலிஞ்சிமடம் சென்று ஆய்வு செய்தார். அங்கு உயிரிழந்த வேலுவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களை சப்-கலெக்டர் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அவரிடம் பொதுமக்கள் கூறும்போது, 'சாலை வசதிக்காக பல கிலோ மீட்டர் தூரம் நடந்து கும்பையாற்றை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழைக்காலங்களில் அதிக தண்ணீர் வரும்ேபாது ஆற்றை கடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி சாலை வசதி செய்து தர வேண்டும்' என்றனர்.

மேலும், கடையல் பேரூராட்சி 4-வது வார்டு கவுன்சிலர் ரெகுகாணி, மோதிரமலை கிராம சபை செயலாளர் சவுந்தர்ராஜன் காணி, பேச்சிப்பாறை ஊராட்சி தலைவர் தேவதாஸ் ஆகியோர் மக்களின் அடிப்படை ேதவைகள் குறித்து விளக்கினர்.

திட்ட மதிப்பீடு தயார் செய்ய அறிவுத்தல்

இதையடுத்து சப்-கலெக்டர் கவுசிக் கும்பையாற்றில் பாலம் கட்டுவது தொடர்பாக ஆய்வு செய்தார். தொடர்ந்து கடையல் பேரூராட்சி செயல் அலுவலரிடம் அங்கு பாலம் மற்றும் சாலை அமைப்பது தொடர்பான வரைபடங்கள் மற்றும் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வன அலுவலர் இளையராஜா, ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் கோலப்பன், கடையல் பேரூராட்சி செயல் அலுவலர் கந்தசாமி, என்ஜினீயர் போஸ் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story