மாணவர்களை 'ராக்கிங்' செய்தால் கடும் நடவடிக்கை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ் எச்சரிக்கை


மாணவர்களை ராக்கிங் செய்தால்  கடும் நடவடிக்கை       ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ் எச்சரிக்கை
x

If students are 'rocked' Strict action

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

மாணவர்களை 'ராக்கிங்' செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ் கூறினார்.

வகுப்புகள் தொடக்க விழா

கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு 150 இடங்கள் உள்ளன. அதில் 127 இடங்கள் மாநில அரசின் ஒதுக்கீடு அடிப்படையிலும், 23 இடங்கள் மத்திய அரசின் ஒதுக்கீடு அடிப்படையிலும் நிரப்பப்படுகின்றன. இந்தநிலையில் 2022-2023-ம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்பில் 127 பேர் சேர்ந்துள்ளனர். மத்திய அரசின் ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்த மாணவர்கள் விரைவில் கல்லூரிக்கு வருவார்கள் எனக்கூறப்படுகிறது.

இந்தநிலையில் முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகளுக்கு வகுப்புகள் தொடக்க விழா நேற்று அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் நடந்தது. இதையொட்டி முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளை சீனியர் மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

விழாவில் சமூக மருந்தியல் துறை பேராசிரியர் சுரேஷ்பாலன் வரவேற்று பேசினார். கல்லூரி துணை முதல்வர் லியோடேவிட் முன்னிலை வகித்தார். மருத்துவத்துறை பேராசிரியர் பயஸ், அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர் ஜெயலால், நரம்பியல் துறை பேராசிரியர் கிங்ஸ்லி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

பெற்றோருக்கு நன்றி உள்ளவர்களாக...

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் அருள்பிரகாஷ் தலைமை தாங்கி, வகுப்புகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மருத்துவத்துறையின் சேவை உலகில் சிறந்த, புனிதமான சேவையாகும். இந்த துறையை தேர்ந்தெடுத்துள்ள மாணவ- மாணவிகளாகிய உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். இந்த துறையை நீங்கள் தேர்ந்தெடுத்து படிக்க உங்களது பெற்றோர் மிகவும் சிரமப்பட்டு இருப்பார்கள். எனவே அவர்களுக்கு நீங்கள் என்றென்றும் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கண்காணிப்பு குழு

கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி உங்களுக்கு 2-வது தாய்வீடு ஆகும். தமிழகத்தில் தலைசிறந்த மருத்துவக்கல்லூரிகளில் இந்த மருத்துவக்கல்லூரியும் ஒன்றாகும். இந்த மருத்துவக்கல்லூரியில் அனைத்து துறைகளும் உள்ளன. கல்வியின் தரமும் சிறப்பாக இருக்கும்.

மருத்துவக்கல்வி சமூகத்தில் உங்களை சிறந்த மனிதராக, மதிப்பும்- மரியாதையும் மிக்க மனிதராக மாற்றும். எனவே நீங்கள் மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பு, சிறப்பு மருத்துவம் பயின்று வாழ்வில் முன்னேற வாழ்த்துகிறேன்.

இந்த மருத்துவக்கல்லூரியில் 'ராக்கிங்' தடை செய்யப்பட்டுள்ளது. ராக்கிங்கை கண்காணிப்பதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் மாணவ- மாணவிகள் விடுதிகளில் தங்கியிருந்து கண்காணிப்பார்கள். அதனால் மாணவர்கள் அச்சப்பட வேண்டியதில்லை.

புகார் தெரிவிக்கலாம்

அதையும் மீறி 'ராக்கிங்' பிரச்சினைகள் இருந்தால் மாணவர்கள் புகார் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மாணவர்கள் தரப்பில் 2 பேரும், பெற்றோர் தரப்பில் 2 பேரும் கருத்து தெரிவித்தனர். விழாவில் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்து கொண்டனர்.


Next Story