தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்
Crops submerged in water
திருப்புவனம்,
திருப்புவனம் கண்மாய் கரை அருகே உள்ளது மாவடி பிச்சை வாய்க்கால். இந்த பகுதியில் தென்னங்கன்றுகள், கரும்பு, வாழை உள்ளிட்டவைகளை விவசாயிகள் அதிகம் பயிரிட்டுள்ளனர். தொடர்ந்து பெய்த மழையால் கண்மாய் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. மேலும் தொடர் மழையாலும், ஊற்றாலும் வயல்களில் தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ளன. குறிப்பாக தென்னங்கன்று நடவு செய்துள்ள வயலில் சுமார் 5 அடி உயரத்திற்கும், வாழை பயிரிட்டுள்ள வயலில் சுமார் 6 அடி உயரத்திற்கும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதேபோல் கரும்பு தோட்டத்திலும் தண்ணீர் தேங்கியுள்ளது. தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும், கடன் வாங்கி விவசாயம் செய்ததாகவும், அனைத்து பயிர்களும் தண்ணீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டதாகவும் கவலை தெரிவித்தனர்.
எனவே அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நிலங்களை பார்வையிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.