போக்குவரத்து போலீஸ் நிலையத்தை சரக்கு வேன் டிரைவர்கள் முற்றுகை
Cargo van drivers lay siege to the traffic police station
அதிக அபராதம் விதிப்பு
மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசும் கடந்த மாதம் முதல் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகைகளை அதிகரித்து உள்ளது. அதேபோல் புதுக்கோட்டை நகரில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது அபராத தொகை போக்குவரத்து போலீசாரால் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று புதுக்கோட்டையில் இயங்கி வரும் சரக்கு வேன் டிரைவர்கள் சீருடை அணியாமல் வாகனங்களை இயக்கினாலோ, போக்குவரத்து விதிகளை மீறினாலோ அதிக அளவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
போலீஸ் நிலையத்தை முற்றுகை
ஒருமுறை அபராத தொகை வசூல் செய்யப்பட்டவுடன் அன்றைய தினமே மறுமுறையும் அபராத தொகை வசூல் செய்யப்படுகிறது.
இதனால் தமிழக அரசு உடனடியாக உயர்த்தப்பட்ட அபராத தொகைகளை கைவிட வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தாது என்று சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டை நகர போக்குவரத்து போலீஸ் நிலையத்தை சி.ஐ.டி.யூ. சரக்கு வேன் டிரைவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சரக்கு வேன்களை வரிசையாக நிறுத்தி...
மேலும் 50-க்கும் மேற்பட்ட சரக்கு வேன்களை வரிசையாக போக்குவரத்து போலீஸ் நிலையம் முன்பாக நிறுத்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மரியம் சாந்தம் செல்வராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.