புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்
People who come to complain should be treated kindly
நாகர்கோவில்:
புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து ெகாள்ள வேண்டும் என நாகர்கோவில் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் போலீசாருக்கு அறிவுரை கூறினார்.
திடீர் ஆய்வு
குமரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அவ்வப்போது சென்று திடீர் ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில் நித்திரவிளை, வடசேரி, சுசீந்திரம் உள்ளிட்ட போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்தநிலையில் நேற்று நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு நடத்தினார்.
அப்போது போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் வருகை பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும் முதல் தகவல் அறிக்கை, புகார் மனு அளிக்க வந்தவர்களின் விவரங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, அவர் பேசும்போது 'நிலுவையில் உள்ள வழக்குகளை உடனுக்குடன் விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும். புகார் மனு மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்.
புகார் பெட்டி
பொதுவாக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு ஏராளமான புகார் மனுக்கள் வரும். அவ்வாறு வரும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு போலீசாரும் நேர்மையாக நடந்து கொண்டால் நியாயம் கிடைக்கும். போலீசார் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதை தெரிவிப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பிரச்சினை தொடர்பான மனுவை புகார் பெட்டியில் போட்டால் அதை நான் நேரில் பார்த்து உரிய நடவடிக்கை எடுப்பேன். எனவே புகார் பெட்டியை அனைத்து போலீசாரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்' என்றார்.
இந்த ஆய்வின் போது போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன்குமார், வடசேரி இன்ஸ்பெக்டர் திருமுருகன் ஆகியோர் உடன் இருந்தார்.