கவுரவ கொலை செய்வதாக மிரட்டி வீட்டில் சிறை வைத்துள்ள கர்ப்பிணி மனைவியை மீட்க வேண்டும்- ஈரோடு போலீசில் கணவர் புகார் மனு
மனு
கவுரவ கொலை செய்வதாக மிரட்டி வீட்டில் சிறை வைத்துள்ள கர்ப்பிணி மனைவியை மீட்கக்கோரி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் கணவர் புகார் மனு கொடுத்தார்.
பெண் டாக்டர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்பள்ளம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜின் மகன் ஹரிஹரன் (வயது 27). இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறிஇருந்ததாவது:-
நான் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஆய்வக தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றி வருகிறேன். அதே ஆஸ்பத்திரியில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள தாமரைபாளையத்தை சேர்ந்த சதாசிவத்தின் மகள் சுகந்தி (27) டாக்டராக பணியாற்றினார். எங்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. நாங்கள் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.
சுகந்திக்கு அவரது பெற்றோர் வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இதனால் கடந்த ஜூலை மாதம் 9-ந் தேதி நானும், சுகந்தியும் பழனி முருகன் கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டோம். அதன்பிறகு ஓசூருக்கு சென்று வாடகைக்கு வீடு எடுத்து தங்கினோம். தற்போது எனது மனைவி 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறார்.
கவுரவ கொலை
இதுபற்றி அறிந்து கொண்ட எனது மனைவியின் தாயும், பாட்டியும் தாங்கள் ஓசூருக்கு வந்து சேர்த்து வைப்பதாகவும், ஊரில் உறவினர்கள் முன்னிலையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்கள்.
அதன்பிறகு மனைவி சுகந்தியை அவர்கள் உடன் அழைத்து சென்றார்கள். அங்கு சென்ற பிறகும் என்னிடம் செல்போனில் அவர் பேசிக்கொண்டு இருந்தார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி எனது மனைவியை தீபாவளிக்கு என்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டேன். அப்போது அவரது குடும்பத்தினர், என்னை சாதி பெயரை சொல்லி திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்தனர். எனது மனைவியிடம் செல்போனில் பேசியபோது, சேர்ந்து வாழ்ந்தால் கவுரவ கொலை செய்து விடுவதாகவும், தனி அறையில் அடைத்து வைத்துள்ளதாகவும் அழுது கொண்டே கூறினார்.
மீட்பு
அவர்கள் எனது மனைவியை கொலை செய்து விடவோ அல்லது எனது குழந்தையை கருவிலேயே அழித்து விடவோ செய்வார்கள் என்று அச்சமாக உள்ளது. எனவே மனைவியின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுத்து எனது காதல் மனைவியை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.