சிறப்பாக செயல்பட்ட அரசு விடுதி காப்பாளர்களுக்கு பரிசுத்தொகை- கலெக்டர் வழங்கினார்
collector
ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அரசு விடுதி காப்பாளர்களுக்கு பரிசுத்தொகையை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.
விடுதி காப்பாளர்கள்
ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் அரசு விடுதிகளில் சிறப்பாக பணியாற்றிய காப்பாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி ரங்கநாதன் தலைமை தாங்கினார்.
விழாவில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்துகொண்டு சிறப்பாக பணியாற்றிய காப்பாளர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் சிவகிரி அரசு மகளிர் விடுதி காப்பாளர் சுலோச்சனாவுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், அவல்பூந்துறை அரசு மகளிர் விடுதி காப்பாளர் செல்விக்கு 2-வது பரிசாக ரூ.5 ஆயிரமும், நம்பியூர் அரசு ஆண்கள் விடுதி காப்பாளர் குமாரசாமிக்கு 3-வது பரிசாக ரூ.3 ஆயிரமும் வழங்கப்பட்டது.
பாராட்டு
இதேபோல் ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் மலைவாழ் மக்களுக்கு வழங்கப்பட்ட போட்டித்தேர்வு பயிற்சி முகாமில் குரூப்-2 முதல் நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பவித்ரா, கிருஷ்ணன் ஆகியோரையும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முதல் நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற ரமேஷ் என்பவரையும் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பாராட்டினார்.
முன்னதாக குழந்தைகள் தின விழாவை ஈரோடு ஆசிரியர் காலனியில் உள்ள அரசு தொடக்க பள்ளிக்கூட மாணவிகளுடன் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது மாணவிகளுக்கு அவர் இனிப்பு வழங்கினார்.
இந்த விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.