ஈரோடு வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தில் பராமரிப்பு பணி தொடங்கியது- போக்குவரத்து மாற்றம்
bridge
ஈரோடு வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
நுழைவு பாலம்
ஈரோடு வெண்டிபாளையம் பழைய கரூர்ரோட்டில் 2 ரெயில்வே கேட்டுகள் இருந்தன. இதனால் ரெயில்கள் வரும்போது வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தநிலையில் வெண்டிபாளையத்தில் சேலத்தில் இருந்து ஈரோடு மார்க்கமாக செல்லும் ரெயில்களின் தண்டவாள பகுதியில் நுழைவு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பாலம் திறக்கப்பட்டது. மழை பெய்யும்போது அந்த நுழைவு பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தார்கள். தண்ணீர் தேங்கி நிற்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தார்கள்.
பராமரிப்பு பணி
இந்த கோரிக்கையை ஏற்று தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ரெயில்வே நுழைவு பாலத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார். இதையடுத்து அங்கு பராமரிப்பு பணிகள் நேற்று தொடங்கப்பட்டது.
நுழைவு பாலத்தில் தேங்கியிருந்த தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டது. இதையடுத்து நுழைவு பாலத்தின் இருபுறங்களிலும் வடிகால் வசதி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த வடிகால் மூலமாக தேங்கி நிற்கும் தண்ணீர், வாய்க்காலில் சென்று கலக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போக்குவரத்து மாற்றம்
ரெயில்வே பாலம் பராமரிப்பு பணி காரணமாக வெண்டிபாளையம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மரப்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் பழைய கரூர் ரோட்டில் செல்வதற்கு பதிலாக பழைய ரெயில் நிலையம் ரோடு வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது. இதேபோல் மோளகவுண்டம்பாளையம் பகுதியிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.