பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி சாலை மறியல்


பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொட்டித்தீர்த்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின. இதனால் பயிர்கள் அழுகி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக சீர்காழி, கொள்ளிடம் பகுதிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.இந்தநிலையில் மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாய சங்கத்தினர் மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சிம்சன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் துரைராஜ், டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் அன்பழகன், விவசாய சங்க நிர்வாகிகள் ராமலிங்கம், வாணிதாஸ், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரமும், விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு குடும்ப அட்டைக்கு தலா ரூ.10 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும்.

நிவாரணம்

சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையை மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் தாலுகாக்களுக்கும் சேர்த்து அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர்.இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

மயிலாடுதுறையில் நேற்று கடைமுக தீர்த்தவாரி விழா நடந்ததால் பஸ்களில் ஏராளமாக பக்தர்கள் வந்தனர். இந்த நேரத்தில் சாலை மறியல் நடந்ததால் பஸ்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் பஸ்களில் இருந்து இறங்கி நீண்ட தூரம் நடந்து காவிரி துலா கட்டத்திற்கு சென்றனர்.சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை சந்திப்பில் நேற்று 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story